#BREAKING தமிழ்தாய் வாழ்த்துக்கு 3வது இடமா? - விடிந்ததுமே கொதித்தெழுந்த அன்புமணி...!
தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. தமிழ்நாட்டில் நடைபெறும் ஆளுனர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்பட வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றியவரின் பெயரிலான பல்கலை.யில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாமிடமா முதலில் பாடப்படுவதை உறுதி செய்க! நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள 33-வது பட்டமளிப்பு விழாவில் முதலில் ’’வந்தே மாதரம்’’ தேசியப் பாடலும், அடுத்து ’’ஜன கண மன” தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகு மூன்றாவதாகத் தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசே வழிகாட்டுதல்களை வழங்கிய பிறகும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாவது இடத்திற்கு திட்டமிட்டு தள்ளுவது கண்டிக்கத்தக்கது. நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர் சந்திரசேகர்,’’இது ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால், ஆளுநர் மாளிகையிலிருந்து எங்களுக்குத் தெளிவான மற்றும் கண்டிப்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் பங்கேற்கும் விழாக்களில் இந்த நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி தான் நடந்து கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர், ஆளுனர் பங்கேற்கும் மாநில அரசு விழாக்களில் முதலில் தேசியப் பாடல், இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு பிறப்பித்திருந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது. கடந்த மே 10-ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற தமிழக அரசு பதவியேற்கும் விழாவில் முதலில் தேசியப் பாடல், பின்னர் தேசிய கீதம் ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 15 நாளில் இப்படியா..? அரிசி விலை உயர்வு... அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு.!
இந்த வரிசை முறைக்கு தமிழ்நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 9-ஆம் தேதி பிறப்பித்த ஆணையில், மாநிலப் பாடல்கள் பாடப்படும் விழாக்களில் அது தான் முதலில் பாடப்பட வேண்டும்; அதன்பின் தேசியப் பாடல்; மூன்றாவதாக தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதையும் மீறி வந்தே மாதரம் என்ற தேசியப் பாடலைத் தான் முதலில் பாட வேண்டும் என்று ஆளுனர் மாளிகை கட்டாயப்படுத்துவது அப்பட்டமான அதிகார வெளிப்பாடு ஆகும்.
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்று தொடங்கும் தமிழ்த் தாய் வாழ்த்தை எழுதியவரே மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்கள் தான். அவரது பெயர் தான் நெல்லை பல்கலைக்கழகத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. அங்கும் கூட, மத்திய அரசின் வழிகாட்டுதல்களையும் புறக்கணித்து விட்டு, வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்று ஆளுனர் மாளிகை கட்டாயப்படுத்துவதும், அதை பல்கலைக்கழக துணை வேந்தர் அப்படியே ஏற்றுக் கொள்வதும் சரியல்ல.
இதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. தமிழ்நாட்டில் நடைபெறும் ஆளுனர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்பட வேண்டும். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஜூலை 28-ஆம் தேதி நடைபெறவுள்ள 33-வது பட்டமளிப்பு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப் படுவதை தமிழ்நாடு அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: "ஒருவழியாக ஓய்ந்த பிரச்சினை"..! பாமக தலைவர் பதவி..! வழக்கில் டிவிஸ்ட் வைத்த ராமதாஸ்..!!