370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு 7 ஆண்டுகள்! ஜம்மு-காஷ்மீர், லடாக் மக்களின் மாற்றத்தை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி!
370 மற்றும் 35A பிரிவுகள் ரத்து செய்யப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் வளர்ச்சி அடைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியலமைப்பின் 370 மற்றும் 35(A) ஆகிய பிரிவுகள் ரத்து செய்யப்பட்டு இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அது வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகத் தமது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி எடுக்கப்பட்ட அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அங்கு உள்கட்டமைப்பு வசதிகள் பெருமளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், கல்வி, மருத்துவம், தொழில்முனைவோர் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, பத்தாண்டுகளாகத் தங்களது அடிப்படை அரசியலமைப்பு உரிமைகள் மறுக்கப்பட்ட பெண்கள் மற்றும் விளிம்புநிலை சமூகத்தினர், இந்திய அரசியலமைப்பு முழுமையாக அமல்படுத்தப்பட்டதன் மூலம் தற்போது அதிகாரமளிக்கப்பட்டிருப்பதாகப் பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி நாளை ஆந்திரா-கர்நாடகா பயணம்.. பல கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்!
மேலும், தேசிய ஒருமைப்பாட்டிற்காகத் தம் வாழ்நாளை அர்ப்பணித்த டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளை நாடு கொண்டாடும் இந்த ஆண்டில், இந்த 7-ஆம் ஆண்டு நிறைவு நாள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது என்றும், அவர் பல தசாப்தங்களுக்கு முன்பு கண்ட கனவு 2019 ஆகஸ்ட் 5 அன்று நனவானதாகவும் குறிப்பிட்டுள்ளார். விக்சித் பாரத் படைப்பில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் பங்களிப்பை உறுதி செய்ய அரசு தொடர்ந்து பாடுபடும் என்றும் பிரதமர் தமது பதிவில் உறுதிபூண்டுள்ளார்.
இதையும் படிங்க: மக்கள் பணம் எங்கே.? பிரதமர் மோடிக்கு மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி..!!