×
 

போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி!! இந்தியாவில் அவலம்! ஆஸ்திரேலியா சுகாதாரத்துறை வார்னிங்!

ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட வெறிநாய்க்கடி தடுப்பூசியின் மாற்றுத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு பரிந்துரை செய்யப்படுள்ளது.

இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் 'அபய்ராப்' (Abhayrab) வெறிநாய்க்கடி தடுப்பூசியின் போலி தொகுப்புகள் புழக்கத்தில் உள்ளதாக ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், இந்தியாவில் இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்கள் வெறிநாய்க்கடி நோயிலிருந்து முழுமையான பாதுகாப்பு பெறாமல் போகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

'அபய்ராப்' தடுப்பூசி ஐதராபாத்தைச் சேர்ந்த இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஹியூமன் பயோலாஜிகல்ஸ் இன்ஸ்டிடியூட் பிரிவால் தயாரிக்கப்படுகிறது. இது உலக சுகாதார அமைப்பால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட தரமான தடுப்பூசியாகும். ஆனால், 2023 நவம்பர் 1ஆம் தேதி முதல் இந்தியாவில் இந்த தடுப்பூசியின் போலி தொகுப்புகள் விற்பனைக்கு வந்துள்ளதாக ஆஸ்திரேலிய தடுப்பூசி ஆலோசனைக் குழு (ATAGI) தெரிவித்துள்ளது.

போலி தடுப்பூசியின் ரசாயன கலவை, பேக்கேஜிங் மற்றும் லேபிளில் உண்மையானதிலிருந்து பெரிய வித்தியாசம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால், போலி தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு வெறிநாய்க்கடி நோய்க்கு எதிரான பாதுகாப்பு கிடைக்காமல் போகலாம். வெறிநாய்க்கடி நோய் அறிகுறிகள் தோன்றிய பிறகு கிட்டத்தட்ட 100 சதவீதம் உயிரிழப்பை ஏற்படுத்தும் கொடிய நோயாகும்.

இதையும் படிங்க: கதவை உடைத்து தூக்கிய போலீஸ்! அசால்டாக வெளியே வந்த சவுக்கு சங்கர்!! வைரலாகும் வீடியோ!

ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை, 2023 நவம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவில் 'அபய்ராப்' தடுப்பூசியின் ஒரு டோஸ் அல்லது அதற்கு மேற்பட்ட டோஸ்களைப் பெற்றவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. போலி தடுப்பூசியை வெளியில் பார்த்து உண்மையானதா அல்லது போலியானதா என்று கண்டுபிடிக்க முடியாது என்பதால், அந்தக் காலத்தில் போட்டுக்கொண்ட அனைத்து டோஸ்களையும் செல்லாதவையாகக் கருத வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அத்தகையவர்கள் ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப்பட்ட 'ராபிபூர்' அல்லது 'வெரோராப்' போன்ற மாற்று தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. போலி தொகுப்புகள் டெல்லி, மும்பை, அகமதாபாத், லக்னோ போன்ற நகரங்களில் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இது மேலும் பரவியிருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட், 2025 தொடக்கத்தில் ஒரு குறிப்பிட்ட பேட்சில் (Batch KA24014) பேக்கேஜிங் பிரச்னை கண்டறியப்பட்டதாகவும், அது தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்றும், போலி தொகுப்புகள் இப்போது சந்தையில் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஆஸ்திரேலியாவின் எச்சரிக்கை பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப்படுவதால், தடுப்பூசியின் தரம் மிகவும் முக்கியமானது. போலி மருந்துகள் புழக்கத்தைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார வல்லுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: “மகளிர் உரிமைத் தொகையால் கூடுதல் நிதிச்சுமை... ஆனா...” - ப.சிதம்பரம் கொடுத்த புதுவித விளக்கம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share