மீண்டு(ம்) வந்தார் அல்பானீஸ்.. ஆஸி., தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி.. இழந்த ஆதரவை மீட்டது எப்படி?
ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு வரை பிரதமர் அல்பானீஸுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைவாகவே இருந்தது. இந்நிலையில் எப்படி அவர் ஆதரவை மீட்டெடுத்து மீண்டும் பிரதமரானார் என்பதை விரிவாக பார்க்கலாம்..
ஆஸ்திரேலியாவில் மொத்தமுள்ள 150 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. 150 தொகுதிகளில் 76 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும். தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி, கன்சர்வேடிவ் கட்சி இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையில் தொழிலாளர் கட்சி களமிறங்கியது. எதிக்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் தலைமையில் கன்சர்வேடிவ் கட்சி களமிறங்கியது. பரபரப்பாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், நேற்று இரவே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் 2022ல் ஆட்சி அமைத்த தொழிலாளர் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அறுதிப் பெரும்பான்மைக்கு 76 இடங்கள் போதும் என்ற நிலையில், தொழிலாளர் கட்சிக்கு 78 இடங்கள் கிடைத்தன. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார். அவரை எதிர்த்து லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பீட்டர் டட்டனுக்கு (Peter Dutton) 30 இடங்கள் மட்டுமே கிடைத்த நிலையில் அவரது சொந்த தொகுதியிலேயே அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆஸ்திரேலிய வரலாற்றில் இதுவரை எந்தவொரு எதிர்க்கட்சி தலைவரும் தாம் போட்டியிட்ட தேர்தலில் தோல்வியே அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது அந்த வரலாறு மக்களின் தீர்ப்பால் மாற்றப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார் என கூறப்பட்டது. அதன்படியே அவர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு வரை பிரதமர் அல்பானீஸுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைவாகவே இருந்தது. அதற்கு விலைவாசி உயர்வு, பண வீக்கம், வீட்டு வசதி சிக்கல்கள் என பல காரணங்கள் சொல்லப்பட்டது. லிபரல் கட்சி வேட்பாளர் பீட்டர் டட்டன் அந்தச் சூழலை தனதாக்கிக்கொண்டு வெற்றி பெற பல்வேறு வாக்குறுதிகள் அளித்தார். ஆனால் அவர் அறிவித்த திட்டங்களில் சில, அமெரிக்க தேர்தலில் டிரம்ப் அறிவித்த வாக்குறுதிகள் போலவே இருந்தன.
அமெரிக்காவில் இப்போதைய சூழலை ஒப்பிட்டுப் பார்த்த ஆஸ்திரேலிய வாக்காளர்கள், அந்தோணி அல்பானீஸே தேவலாம் என்ற நிலைக்கு வந்து, அவரையே மீண்டும் வெற்றி பெறச் செய்துள்ளனர். பண வீக்கத்தை கட்டுப்படுத்துதல், சிறந்த சுகாதார பராமரிப்பு முறையை நடைமுறைக்கு கொண்டுவருதல் போன்றவற்றில் அவருடைய வலுவான பிரசாரம் வெற்றிக்கு வழி வகுத்தது. அத்துடன் அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி போருக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை அந்தோணி அல்பானீஸ் பிரசாரத்தில் முன்னெடுத்துச் சென்றார்.
அது அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். 21 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது முறையும் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் என்ற சிறப்பை அந்தோணி அல்பானீஸ் பெற்றுள்ளார். இந்த தருணம் தனது வாழ்வில் சிறப்பானது என அவர் கூறி உள்ளார். ஆஸ்திரேலியாவின் மதிப்புகளுக்காகவும், எதிர்காலத்துக்காகவும், உலகளாவிய சவால்களை ஆஸ்திரேலியாவுக்கே உரிய பாணியில் எதிர்கொள்ளவும் இன்று, ஆஸ்திரேலிய மக்கள் தங்கள் கட்சிக்கு வாக்கு செலுத்தியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, ஆஸ்திரேலிய பிரதமராகும் ஆன்டனி ஆல்பனீஸிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஆஸ்திரேலிய பிரதமராக மீண்டும் தேர்வானதற்கும், இந்த பெரும் வெற்றிக்கும் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: ‘இதன்மூலம், ஆஸ்திரேலிய மக்கள் உங்கள் தலைமையின் மீது வைத்துள்ள நம்பிக்கை வெளிப்பட்டுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை, செழிப்புக்கான நமது தொலைநோக்குப் பார்வையை முன்னோக்கி நகர்த்தவும் நாம் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: எல்லையில் தெறித்து ஓடும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்.. இந்திய ராணுவம் குவிப்பால் பீதியில் தீவிரவாதிகள்!