ஷேக் ஹசினாவை தொடரும் சிக்கல்! சிறைவாசம்..! நாடு கடத்த தீவிரம் காட்டும் வங்கதேசம்.!
‘என் மீது 227 பேர் வழக்கு போட்டு இருக்கிறார்கள். எனவே அந்த 227 பேரை கொல்லும் உரிமம் எனக்கு கிடைத்து இருக்கிறது‘ என்று ஹசீனா கூறியதாக புகார் எழுந்துள்ளது.
வங்கதேசத்தில் நடந்த மாணவர் எழுச்சியை அடுத்து கடந்த ஆகஸ்ட் 5, 2024 வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா தப்பிவந்தார். இந்நிலையில் அவரை நாடு கடத்த வங்கதேச இடைக்கால அரசு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இடைக்கால நிர்வாகத்தின் வெளியுறவு விவகார ஆலோசகர் முகமது தௌஹித் ஹொசைன், இந்திய அதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தி உள்ளார்.
முன்னதாக வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. முகமது கோலம் மோர்டுசா மொஜும்தர்(Md Golam Mortuza Mozumder) தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.
இதே வழக்கில், ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவை சேர்ந்த ஷகில் அகந்த் புல்புல் என்பவருக்கு 2 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹசீனா– புல்புல் இருவரும் பேசியதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஆடியோ லீக் ஆனதுதான் இந்த வழக்கின் அடிப்படை. அந்த ஆடியோவில் ‘என் மீது 227 பேர் வழக்கு போட்டு இருக்கிறார்கள். எனவே அந்த 227 பேரை கொல்லும் உரிமம் எனக்கு கிடைத்து இருக்கிறது‘ என்று ஹசீனா கூறியுள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: நீங்க சொல்லுற மாதிரிலாம் பண்ண முடியாது! முகமது யூனுஸ் கோரிக்கையை நிராகரித்தார் பிரதமர் மோடி..
ஹசீனாவின் இந்த மிரட்டல் பேச்சு நீதிமன்றத்தை அவமதிப்பதாக இருப்பதாக அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அவரது பேச்சு, அவர் சட்ட நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டவர் அல்லது கோர்ட் அதிகாரத்தை குறைத்து மதிப்பிடுவதாக இருக்கிறது; சம்பந்தப்பட்டவர்களை அச்சுறுத்தவே பேசியிருக்கிறார் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஹசீனா, புல்புல் இருவரும் விளக்கம் அளிக்க கோர்ட் கடந்த மே மாதம் உத்தரவிட்டது. அவர்கள் விளக்கம் தராததால், நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டது. ஆஜர் ஆகவில்லை.
மறுமுறை சம்மன் அனுப்பப்பட்டது. அது, தேசிய நாளிதழில் வெளியிடப்பட்டபோதும் இருவரும் ஆஜராகவில்லை. தொடர்ந்து பதில் அளிக்காததால், நீதிமன்ற அவமதிப்பாக கருதி, இருவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. வங்கதேசத்தில் கடந்தாண்டு இட ஒதுக்கீடு தொடர்பாக நடந்த மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. பாதுகாப்பு கருதி அவர், இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன் பின், அவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டன.
ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி 11 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அவருக்கு விதிக்கப்பட்ட முதல் தண்டனை இதுதான். ஹசீனா உள்ளிட்ட இருவருக்கும் விதிக்கப்பட்ட சிறை தண்டனை, அவர்கள் கைது அல்லது சரணடையும் நாளில் நடைமுறைக்கு வரும் என சர்வதேச கோர்ட் கூறியிருக்கிறது.
1971 வங்கதேச சுதந்திர போரின்போது, பாகிஸ்தான் ராணுவத்தால் செய்யப்பட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக, 2009ல் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை ஷேக் ஹசீனா கொண்டு வந்தார். இன்று அதே கோர்ட்டில் அதே கோர்ட் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடுகடத்தல் முயற்சியில் வங்கதேசம் முனைப்பு காட்டி வருகிறது.
இதையும் படிங்க: வங்கதேச கலவரத்தின் முக்கிய புள்ளிக்கு இந்தியாவில் வாக்கு! மேற்கு வங்கத்தில் மெகா மோசடி அம்பலம்..!