ஓடும் ரெயிலில் பயணிகளை தள்ளி கொன்ற ‘சைக்கோ கில்லர்’! போலி போலீசாக நடித்து வந்தவர் கைது!!
இதையடுத்து நிதினின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.
பீகார் மாநிலத்தில் ஓடும் ரெயிலில் பயணிகளை குறிவைத்து பணம் பறித்து, பின்னர் அவர்களை கீழே தள்ளியதாக கூறப்படும் 25 வயது இளைஞரை ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரால் ‘சைக்கோ கில்லர்’ என குறிப்பிடப்பட்டுள்ள ரோஹித் திவாரி என்ற அந்த நபர், போலீஸ் அதிகாரி போல நடித்து பயணிகளை மிரட்டி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
போஜ்பூர் மாவட்டம் பரிஸ்வான் பகுதியைச் சேர்ந்த ரோஹித் திவாரி, பயணிகள் ரெயில்களில் தன்னை போலீஸ், ஆர்பிஎஃப் அல்லது எஸ்டிஎஃப் அதிகாரி என கூறிக்கொண்டு சுற்றி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தொழிலாளர்கள் மற்றும் இளம் பயணிகளை குறிவைத்து, டிக்கெட் சோதனை அல்லது ரெயிலில் புகைபிடித்ததற்கான அபராதம் எனக் கூறி பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. பணம் கொடுக்க மறுப்பவர்களை மிரட்டி தாக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: கங்கையில் கரைபுரண்ட வெள்ளம்! 100 ஆண்டு பழமையான துர்கா கோவில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி வைரல்!
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 19-ம் தேதி ஐதராபாத்தில் இருந்து பீகாரின் வைஷாலிக்கு ரெயிலில் சென்ற 21 வயது நிதின் குமாரிடம் ரோஹித் பணம் கேட்டதாக போலீசார் கூறுகின்றனர்.
பணம் கிடைக்காததால் நிதினை ஓடும் ரெயிலில் இருந்து தள்ளியதாகவும், பின்னர் அவரது உடல் ரெயில் பாதையில் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நிதினின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கு முன்பும் இதேபோன்ற சம்பவத்தில் கைலாஷ் குமார் என்ற பயணி உயிரிழந்ததாகவும், அவருடன் சென்ற ரித்தேஷ் குமார் காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். உயிர் தப்பிய ரித்தேஷ் அளித்த தகவல்கள் விசாரணையில் முக்கிய தடயமாக இருந்ததாக கூறப்படுகிறது.
தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் மனித உளவுத் தகவல்களின் அடிப்படையில் போலீசார் ரோஹித் திவாரியை வாரணாசி அருகே உள்ள மோகன்சராய் பகுதியில் கைது செய்தனர். அவரிடம் இருந்து கைலாஷ் குமாருக்கு சொந்தமான அடையாள ஆவணங்கள் மற்றும் பர்ஸ் உள்ளிட்டவை மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், ரோஹித் திவாரிக்கு ஏற்கனவே ரெயில்வே வழக்குகளில் குற்றப்பின்னணி இருப்பதாகவும், சுமார் 25 மாதங்கள் சிறையில் இருந்த அவர் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பர்தா அணிந்து கைவரிசை! மூதாட்டியிடம் செயின் பறித்த 2 பெண்கள் கைது!