பட்ஜெட் பெயரில் காது குத்தும் விழா...! பத்திரிகை அடித்து கலாய்த்த அதிமுக..!
பட்ஜெட் பெயரில் மாபெரும் காது குத்தும் விழா நடைபெற உள்ளது என அதிமுக கிண்டலடித்து உள்ளது.
இன்று தமிழக சட்டப்பேரவையில் 2026-2027 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார். இது வழக்கமான முழு பட்ஜெட் இல்லை, ஏனென்றால் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதைய அரசு குறுகிய கால செலவுகளை மட்டுமே கவனத்தில் கொண்டு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த முறையும் காகிதமில்லா முறையில், டேப்லெட்கள் மூலம் உறுப்பினர்களுக்கு விவரங்கள் காட்டப்படும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை, விவசாயிகளுக்கான சலுகைகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டங்கள் போன்றவற்றை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
எனவே, இன்றைய பட்ஜெட்டில் இத்தகைய திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு அல்லது சில புதிய சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.குறிப்பாக சாலைகள், மேம்பாலங்கள், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்துக்கு குறைவான ஒதுக்கீடு கிடைத்ததாக அரசு தரப்பில் ஏற்கனவே கவலை தெரிவிக்கப்பட்ட நிலையில், மாநில அரசு தனது பங்குக்கு முக்கிய துறைகளில் கவனம் செலுத்தும் என்று தெரிகிறது.
இதையும் படிங்க: வரும் பிப். 17ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்..! உற்றுநோக்கும் அரசியல் கட்சிகள்... சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!
இந்த நிலையில் பட்ஜெட் என்ற பெயரில் மாபெரும் காது குத்தும் விழா நடைபெற இருப்பதாக பத்திரிகை அடித்து அதிமுக விமர்சித்து உள்ளது. பட்ஜெட் குறித்து நூதன முறையில் விமர்சனம் செய்துள்ள அதிமுக முதலமைச்சர் தலைமையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முன்னின்று காது குத்துவார் என்று அதிமுக தெரிவித்துள்ளது. கூவம் சுத்திகரிப்பு நிதி, சிங்கார சென்னைக்கு நிதி என விதவிதமாக காது குத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4.5 ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டும் விமர்சையாக காது குத்தும் விழா நடைபெறும் என்று அதிமுக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வஞ்சிக்கும் பாஜக... ஒத்து ஊதும் அதிமுக..! நிதிநிலை அறிக்கையை கண்டித்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!