×
 

கனடாவில் பயங்கர விமான விபத்து! விமானப் பயிற்சிக்கு சென்ற தமிழக, புதுச்சேரி மாணவர்கள் பலி!

சஸ்காட்சுவான் மாகாணத்தின் கிஸ்பே அருகே விமானம் இருப்பது பின்னர் கண்டறியப்பட்டது. விமானத்தில் இருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்ததாக ஹார்வ்ஸ் ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கனடாவில் விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட விமான விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மனோஜ் சிவகுமார் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீசரண் திருஞானசம்பந்தம் ஆகிய இரு இந்திய மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் குடும்பத்தினருக்கும் தேவையான தூதரக உதவிகள் வழங்கப்படும் என இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மனிடோபா மாகாணத்தைச் சேர்ந்த ஹார்வ்ஸ் ஏர் விமானப் பயிற்சி நிறுவனத்துக்குச் சொந்தமான செஸ்னா 172 ரக சிறிய விமானம் இந்த விபத்தில் சிக்கியது. செப்டம்பர் 18-ம் தேதி அதிகாலை, ரெஜினாவில் இருந்து மனிடோபாவின் ஸ்டெய்ன்பாக் நகரை நோக்கி கார்லைல் வழியாக இரவு நேரப் பயிற்சி விமானம் இயக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட நேரத்தில் விமானம் சென்றடையாததால் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கனடாவின் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். சஸ்காட்சுவான் மாகாணத்தின் கிஸ்பே அருகே விமானம் இருப்பது பின்னர் கண்டறியப்பட்டது. விமானத்தில் இருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்ததாக ஹார்வ்ஸ் ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வருவாய் ரூ.1.17 லட்சம் கோடி! செலவு ரூ.1.38 லட்சம் கோடி! வெளியானது தமிழக அரசின் 5 மாத கணக்கு!

விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த இருவரும் விமானி உரிமம் பெற்றவர்கள் என்றும், வர்த்தக விமானி உரிமத்துக்குத் தேவையான விமான நேரத்தைப் பெறுவதற்காக இந்தப் பயணத்தை மேற்கொண்டதாகவும் கனடா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதனால் விபத்துக்கான காரணம் குறித்து தற்போது அதிகாரப்பூர்வ முடிவு எதுவும் வெளியாகவில்லை.

இதனிடையே, உயிரிழந்த இருவரின் அடையாளங்களையும் வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் உறுதி செய்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மனோஜ் சிவகுமார் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீசரண் திருஞானசம்பந்தம் ஆகியோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள தூதரகம், இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு தேவையான அனைத்து தூதரக உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக கூறியுள்ளது.

மேலும், உயிரிழந்த மாணவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடைமுறைகளிலும் குடும்பத்தினருக்கு உதவி செய்யப்படும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. விமானி ஆகும் கனவுடன் கனடாவில் பயிற்சி மேற்கொண்டிருந்த இரு இளைஞர்களின் மரணம், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: டெங்குவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு முக்கியம்! அமைச்சர் அருண்ராஜ் விடுத்த முக்கிய வேண்டுகோள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share