பாகிஸ்தானுக்கு அடுத்த ஆப்பு... மருந்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பறந்த உத்தரவு!!
பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களின் பட்டியலைத் அளிக்குமாறு மருந்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பாகிஸ்தானுடனனா சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது, பாகிஸ்தானியர்கள், இந்தியாவை விட்டு 48 மணிநேரத்தில் வெளியேற கெடு விதிக்கப்பட்டது, வாகா, அட்டாரி எல்லைகள் மூடப்பட்டன, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
மேலும் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டது இதுமட்டுமின்றி பாகிஸ்தான் உடன் வர்த்தகத்தை மொத்தமாக இந்தியா கைவிட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் பல துறைகள் கடுமையான விளைவுகளை, சரிவுகளை சந்திக்க தொடங்கி உள்ளன. குறிப்பாக அங்கு தற்போது மருந்துகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டு உள்ளதால் மருத்துவ அவசரநிலை பிறப்பிக்கும் கட்டாயம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானின் மருந்து விற்பனையில் 40 சதவிகிதம் வரை இந்தியாவில் இருந்து நேரடியாகவும் இந்தியாவில் உருவாக்கப்பட்டு வேறு நாடுகள் வழியாகவும் பாகிஸ்தானுக்கு செல்கிறது.
இதையும் படிங்க: தேசிய பாதுகாப்புக்கான ஆலோசனைக் குழு மாற்றம்.. வெளியானது மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!!
தற்போது இது நிறுத்தப்பட்டதால் பாகிஸ்தானில் மருத்துவ துறை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் அதன் மருந்து மூலப்பொருட்களில் 30% முதல் 40% வரை இந்தியாவை நம்பியுள்ளது, இதில் செயலில் உள்ள மருந்து பொருட்கள் மற்றும் பல்வேறு மேம்பட்ட சிகிச்சை பொருட்கள் அடங்கும். குறிப்பாக புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சைகள், உயிரியல் தயாரிப்புகள், தடுப்பூசிகள் மற்றும் செரா, குறிப்பாக ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி மற்றும் பாம்பு விஷத்தை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. இதனால் பாகிஸ்தானின் மருத்துவ துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களின் பட்டியலைத் அளிக்குமாறு மருந்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மத்திய அரசு சார்பாக உத்தரவிட்டுள்ளது. ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்துத் துறை இந்த பட்டியலை கேட்டு உள்ளதாக கூறப்படுகிறது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு பிரிவான Pharmexcil நிறுவனத்திடமிருந்து விவரங்களைக் கோரியுள்ளது. அவசரமாக வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தத் தகவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானியர்கள் தொடர்ந்து இந்தியாவில் தங்கலாமா..? மத்திய அரசு கூறும் விளக்கம் என்ன?