“மத்திய அரசு அளித்த மானியம் வருமானமல்ல!” - ஆவின் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு வழங்கிய மானியத் தொகையை, அந்த அமைப்பின் வருமானமாகக் கருத முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் நிதி நிலையை மேம்படுத்தவும், அதன் கடன்களைத் திருப்பிச் செலுத்தவும் ஏதுவாகக் கடந்த 2007-08ஆம் ஆண்டில் மத்திய அரசு ₹3 கோடியே 50 லட்சம் ரூபாயை மானியமாக வழங்கியது. இந்தத் தொகையை அந்த ஒன்றியத்தின் 'வருமானம்' எனக் கணக்கில் காட்டி வரி விதிக்க வேண்டும் என்று வருமானவரித் துறை ‘கறார்’ உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை வருமானவரித் துறை தீர்ப்பாயமும் நிராகரித்ததால், தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சட்ட ரீதியான பல முக்கிய அம்சங்களைச் சுட்டிக்காட்டியது. "மத்திய அரசு வழங்கிய இந்த ₹3.50 கோடி என்பது மாவட்ட கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பிற ஒன்றியங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையைச் சரிசெய்யவும், ஒன்றியத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் வழங்கப்பட்ட சிறப்பு நிதியாகும். இதனை ஒரு வணிக ரீதியான வருவாயாக (Revenue) ஒருபோதும் கருத முடியாது" எனத் தங்களது தீர்ப்பில் தெளிவாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: "அணுமின் நிலையங்களை தனியார் மயமாக்கினால் கேன்சர் பரவும்" - சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை!
இந்த நிதி முழுக்க முழுக்க மூலதன வரவு என்பதைக் குறிப்பிட்ட நீதிபதிகள், வருமானவரித் துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் பிறப்பித்த பழைய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, தமிழகம் முழுவதும் உள்ள பிற மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் மானியங்களை வருமானமாகக் காட்டி வரி வசூலிக்க முயன்ற வருமானவரித் துறைக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: ரஷ்ய ராணுவத்தில் கட்டாயப்பணி: 26 இந்தியர்கள் உயிரிழப்பு; 7 பேர் மாயம் - மத்திய அரசு தகவல்!