×
 

தலைக்கு மேலே ஏவுகணை சத்தம்...! துபாயில் சிக்கிய பி.வி. சிந்துவின் உருக்கமான எக்ஸ் பதிவு!

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாகத் துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

ஈரான் மற்றும் இஸ்ரேல் - அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இன்று காலை துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களால் உலகிலேயே மிகவும் பரபரப்பான இந்த விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஈரான் தரப்பில் ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் துபாய் வான்வெளியில் இடைமறித்து அழிக்கப்பட்டன. இதன் சிதறல்கள் விழுந்ததில் துபாய் விமான நிலையத்தின் ஒரு பகுதி லேசான சேதமடைந்தது. இந்தச் சம்பவத்தில் 4 ஊழியர்கள் காயமடைந்துள்ளதாக துபாய் ஊடக அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஆல் இங்கிலாந்து ஓபன் போட்டியில் பங்கேற்பதற்காகச் சென்ற இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பி.வி. சிந்து, துபாய் விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (X) தளத்தில், தற்போது நடப்பவற்றை என்னால் நம்ப முடியவில்லை. தலைக்கு மேலே ஏவுகணைகள் இடைமறிக்கப்படும் சத்தம் கேட்பது மிகவும் பயங்கரமாக இருக்கிறது. துபாய் எப்போதும் பாதுகாப்பான நகரமாக இருக்கும், ஆனால் இப்போது நடக்கும் காட்சிகள் வேதனையளிக்கின்றன என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

பாதுகாப்பு காரணங்களுக்காக துபாய் மற்றும் அபுதாபி ஆகிய விமான நிலையங்களில் இருந்து புறப்பட வேண்டிய மற்றும் அங்கு வர வேண்டிய அனைத்து விமானங்களும் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன. வான்வெளி மூடப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களிலேயே தவித்து வருகின்றனர். துபாயின் புகழ்பெற்ற புர்ஜ் அல் அரப் (Burj Al Arab) ஹோட்டல் மீதும் ட்ரோன் சிதறல்கள் விழுந்து சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. மேலும் அபுதாபி மற்றும் தோஹா ஆகிய நகரங்களிலும் இதே போன்ற பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்திய தூதரகம் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், அங்கு சிக்கியுள்ள இந்திய பயணிகளுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி படுகொலை...! இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அதிரடி தாக்குதல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share