அணு ஆயுத சோதனையா? உண்மையை பேசுங்க ட்ரம்ப்?! அமெரிக்கா குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேட்டி ஒன்றில், சீனா உள்ளிட்ட நாடுகள் பூமிக்கடியில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக தெரிவித்த குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் அளித்த பேட்டியில், சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், வடகொரியா போன்ற நாடுகள் பூமிக்கடியில் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டினார். இதற்கு உடனடியாக சீனா கடும் மறுப்பு தெரிவித்துள்ளது. "நாங்கள் ஒரு பொறுப்பான அணு ஆயுத நாடு. முதலில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்" என்று சீன வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் உலகளாவிய அணு ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பை ஆட்டம் காணச் செய்துள்ளது.
டிரம்ப் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசுகையில், "சீனாவும் ரஷ்யாவும் பூமிக்கடியில் அணு சோதனைகளை ரகசியமாக நடத்துகின்றன. அவர்கள் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் நாங்கள் வெளிப்படையான சமூகம். நாங்களும் சோதனை செய்யப் போகிறோம் என்று தெளிவாகச் சொல்கிறோம். அதனால், 33 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவும் அணு சோதனையை மீண்டும் தொடங்க உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.
இதற்கு முன்பு, டிரம்ப் ஆசிய சுற்றுப்பயணத்தின் போது ரஷ்யா அணு-இயக்க ஏவுகணை சோதனை நடத்தியதை விமர்சித்தார். அதைத் தொடர்ந்து, அமெரிக்க பாதுகாப்புத்துறைக்கு அணு சோதனை தொடங்க உத்தரவிட்டார். இது 1992-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாகும்.
இதையும் படிங்க: சைலண்டாக காய் நகர்த்திய பாக்., அணு ஆயுத சோதனை தீவிரம்! புட்டு புட்டு வைத்த ட்ரம்ப்!
சீன வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்தது. சீனா ஒரு தற்காப்பு அணுசக்தி கொள்கையை மட்டுமே பின்பற்றுவதாகவும், எந்தச் சூழலிலும் எந்த நேரத்திலும் முதலில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டோம் என்றும் உறுதியளித்தது. மேலும், அணு சோதனை தடைக்கான தன்னிச்சை உறுதிமொழியை கடைப்பிடிப்பதாகவும் தெரிவித்தது.
அமெரிக்கா அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தங்கள் மற்றும் விரிவான அணு சோதனை தடை ஒப்பந்தம் போன்றவற்றை உண்மையாக மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. சீனா 1996-ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த அணு சோதனையும் செய்யவில்லை என்று உலகளவில் அறியப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்கா சீனாவின் லோப் நோர் பகுதியில் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் நடப்பதாகக் கூறி வருகிறது.
ரஷ்யாவும் இந்த விவகாரத்தில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மரியா சகரோவா கூறுகையில், அமெரிக்கா முதலில் முழு அளவிலான அணு சோதனையைத் தொடங்கினால் ரஷ்யாவும் உடனடியாக பதில் சோதனையை மேற்கொள்ளும் என்றார். இது அணு ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பையே அழித்துவிடும் என்று எச்சரித்தார். ரஷ்யா 1990-க்குப் பிறகு அணு சோதனை செய்யவில்லை என்றாலும், அணு-இயக்க ஆயுதங்கள் சோதனை செய்ததாக அறிவித்துள்ளது.
டிரம்பின் இந்த அறிவிப்பு 1996-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்கப்பட்ட விரிவான அணு சோதனை தடை ஒப்பந்தத்தை (CTBT) மீறுவதாக உள்ளது. இதனால் உலக அமைதி ஆபத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது புதிய அணு ஆயுதப் போட்டியைத் தூண்டும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். உலகளாவிய அணு கட்டுப்பாட்டு அமைப்பு பலவீனமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டிரம்பின் முடிவு அமெரிக்காவின் அணு ஆயுத மேம்பாட்டுக்கு அவசியம் என்று அவர் வலியுறுத்தினாலும், இது உலக நாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. சீனாவும் ரஷ்யாவும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை கண்டிக்கின்றன. உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இது மாறும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த விவகாரம் அடுத்தடுத்து உலக அரசியல் மேடைகளில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 33 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா அணு ஆயுத சோதனை!! நீயா? நானா? ஒரு கை பார்த்திடலாம்! ட்ரம்ப் அதிரடி!