×
 

தொழில் முதலீடுகளை ஈர்க்க.. லண்டன் சென்ற முதல்வர் விஜய்.. திரண்ட தமிழர்கள், களைகட்டிய வரவேற்பு!!

இது தமிழ்நாட்டின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதை உணர்த்துகிறது.

தமிழ்நாட்டை ஆசியாவிலேயே முன்னணி தொழில்முதலீட்டு மையமாக மாற்றும் நோக்கத்துடன் முதலமைச்சர் விஜய் இங்கிலாந்து பயணத்தைத் தொடங்கியுள்ளார். நேற்று இரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்ட அவர், நள்ளிரவில் துபாயை அடைந்த பிறகு, அங்கிருந்து வேறு விமானத்தில் பயணம் மேற்கொண்டு இன்று லண்டன் வந்து சேர்ந்தார்.

லண்டன் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாகமான வரவேற்பு காத்திருந்தது. அங்கு வசிக்கும் ஏராளமான தமிழர்கள் தமிழ் வெற்றிக் கழகக் கொடிகளை ஏந்தியபடி முதலமைச்சரை வரவேற்றனர். இந்த வரவேற்பு, வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் ஆதரவை வெளிப்படுத்தியது.த.வெ.க. அரசு பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் தமிழ்நாட்டை முதலீட்டாளர்களுக்கு உகந்த முதன்மை மையமாக உருவாக்கும் இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறது. 

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக ‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் சுமார் 8,491 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை முன்வைத்துள்ளன. இவற்றால் சுமார் 5,290 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதை உணர்த்துகிறது.

இதையும் படிங்க: முதல் வெளிநாட்டு அரசு முறைப் பயணம்: தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் புறப்பட்டார் முதல்வர் விஜய்!

சமீபத்தில் நடைமுறைக்கு வந்த இந்தியா-பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இந்த முயற்சிகளுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. ஒப்பந்தம் அமலுக்கு வந்த முதல் நாளிலேயே சென்னையிலிருந்து ஏற்றுமதிப் பொருட்கள் அனுப்பப்பட்டதன் மூலம் தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. பிரிட்டன் நிறுவனங்கள் நீண்ட காலமாகவே தமிழ்நாட்டில் பொறியியல், நிதிச் சேவைகள், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் செயல்பட்டு வருகின்றன. 

பல நிறுவனங்கள் உற்பத்தி ஆலைகளையும் உலகளாவிய திறன் மையங்களையும் அமைத்துள்ளன.இந்த உறவுகளை வலுப்படுத்துவது, ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது மற்றும் மேம்பட்ட உற்பத்தி, வாகனங்கள், மின்சார வாகனங்கள், மின்னணுவியல், உலகளாவிய திறன் மையங்கள் ஆகிய துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்ப்பது ஆகியவை இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கங்களாகும். இதன் மூலம் உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

மேலும், முதலமைச்சர் சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவித்த ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ திட்டத்தை முன்னெடுக்கும் வகையில், உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டைப் பார்வையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் வணிக ரீதியான சிறந்த நடைமுறைகளை நேரடியாக அறிந்துகொள்ளலாம். இது விளையாட்டுச் சுற்றுலா மற்றும் தொடர்புடைய தொழில்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும்.

இந்தக் குழுவில் பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப் உள்ளிட்ட அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். முதலமைச்சர் விஜய் மற்றும் குழுவினர் 17 ஆம் தேதி சென்னை திரும்புவார்கள். இந்தப் பயணம் தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

இதையும் படிங்க: கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி: ரூ.953 கோடி நிதி சுமையை ஏற்று தமிழ்நாடு அரசு அரசாணை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share