ஸ்லிவ் லெஸ் சுடிதார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி... கோவை மலர் வியாபாரிகள் சங்கம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை...!
கோவையில் சட்டக் கல்லூரி மாணவியின் ஆடை குறித்து விமர்சனம் - கோவை மாநகர் மாவட்ட அனைத்து மலர் வியாபாரிகள் நலச்சங்கம் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது
கடந்த 21 ஆம் தேதி கோவை பூ மார்க்கெட்டிற்குச் சென்ற சட்டக் கல்லூரி மாணவி ஜனனி அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் சுடிதார் குறித்து அங்கிருந்த பூ வியாபாரி ஒருவர் விமர்சனம் செய்தார். இதுகுறித்து கேட்ட மாணவி ஜனனியை பூ வியாபாரிகள் சிலர் சூழ்ந்து கொண்டு மிரட்டல் விடுத்ததோடு, செல்போனை பிடுங்கி தாக்கவும் முற்பட்டனர்.
இந்த விவகாரம் குறித்து மாணவி ஜனனி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். மறுபுறத்தில் சட்டக் கல்லூரி மாணவி பூ மார்க்கெட்டில் ரீல்ஸ் எடுக்க வந்ததால் பிரச்சனை ஏற்பட்டதாக பூ வியாபாரிகள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் மாணவியின் ஆடை குறித்து விமர்சித்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர் மாவட்ட அனைத்து மலர் வியாபாரிகள் நலச் சங்கத்தினர் வருத்தம் தெரிவித்து அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மிரட்டலுக்கு அடிபணிய முடியாது... ஐகோர்ட்டில் அதிரடி காட்டிய தமிழ்நாடு அரசு...!
மேலும் மாணவி பூ மார்க்கெட்டில் ரீல்ஸ் ஏதும் எடுக்கவில்லை என்பதையும் உறுதி செய்துள்ளதாகவும், விரும்பத்தகாத இம்மாதிரியான சம்பவங்கள் இனி நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் நடந்தது என்ன?
கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜனனி. இவர் ஆந்திராவில் உள்ள சட்ட கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுகிழமை ஸ்லீவ் லெஸ் சுடிதார் அணிந்து பூ மார்கெட்டிற்கு தனது ஆண் நண்பருடன் சென்றுள்ளார். இதனை பார்த்து அங்கிருந்த பூக்கடை உரிமையாளர் ஒருவர் “ஸ்லிவ் லெஸ் மாதிரியான அரை குறை ஆடைகள் அணிந்தபடி பூ மார்கெட்டிற்கு வரக்கூடாது” என பேசியதாக கூறப்படுகிறது.
"உடை சரியாகத்தான் இருக்கிறது. உங்களது பார்வையை சரியாக வைத்துக் கொள்ளுங்கள்" என அந்த பூக்கடைக்காரரிடம் பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதத்தை அந்த பெண்ணுடன் வந்த நபர் செல்போனில் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து பூ மார்க்கெட்டில் இருந்த வியாபாரிகள் ஒன்று சேர்ந்து அந்த பெண்ணுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவி கோவை கமிஷனர் ஆபீசில் புகார் தரவும், கோவை மாநகர் மாவட்ட அனைத்து மலர் வியாபாரிகள் நல சங்கத்தினரும், கமிஷனர் அலுவலகத்தில் மனு தந்தனர். பூ மார்க்கெட்டில் ரீல்ஸ் எடுப்பதற்காக வந்த பெண் முழு வீடியோவும் வெளியிடாமல் தங்கள் மீது களங்கம் தெரிவித்து, பொய்யான புகாரை தந்துள்ளதாகவும் வியாபாரிகள் கவலையை தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சோசியல் மீடியாக்களில் கடும் விமர்சனங்கள் வெடித்த நிலையில், தற்போது கோவை பூ வியாபாரிகள் சங்கம் சார்பில் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நாகையில் விஜய் பேசுனது கரூரில் எதிரொலிக்குதோ? - அலர்ட் ஆன திமுக... ஆட்டத்தை ஆரம்பித்த தவெக...!