காங்கிரஸுக்கு END CARD?! மொத்தமாக முடிச்சுவிட்ட பீகார் தேர்தல்! ராகுல் செஞ்ச தப்பு! தொண்டர்கள் எதிர்ப்பு!
பீகார் தேர்தலில், தேசிய கட்சியான காங்., படுதோல்வியை சந்தித்திருப்பது, அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சந்தித்த படுதோல்வி கட்சியின் தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்ல, நிர்வாகிகள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தோல்வி எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், இவ்வளவு மோசமான தோல்வியை யாரும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் பீகாரில் பிரசாரம் செய்து திரும்பிய தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள். இந்தத் தோல்வி கட்சியின் எதிர்காலத்துக்கே விடப்பட்ட சவால் என்றும், இனியும் கள நிலவரம் தெரியாமல் தலைமை செயல்பட்டால் காங்கிரஸை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பீகாரில் பிரசாரத்திற்காகச் சென்ற தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள், அங்கு கண்ட உண்மைகளை விரிவான அறிக்கையாகத் தயாரித்து தேசியத் தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த அறிக்கையில் காங்கிரஸ் தோல்விக்கான காரணங்களை அவர்கள் மிகத் தெளிவாகப் பட்டியலிட்டுள்ளனர்.
பீகாரில் காங்கிரஸ் கட்சிக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தொண்டர் பட்டாளமே இல்லை என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். பல வாக்குச்சாவடிகளில் கட்சியின் முகவர்களே இல்லை. 1990-களுக்குப் பிறகு பீகாரில் காங்கிரஸ் முகமாகச் சொல்லக்கூடிய ஒரு தலைவரையாவது உருவாக்கியிருக்க வேண்டும்; ஆனால் தலைமை அதைச் செய்யவில்லை. மாநிலக் கட்சிகளைக் காட்டிலும் மோசமான நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: #BREAKING பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கிய ஒன்றரை வயது குழந்தை... தாய் கண்முன்னே அரங்கேறிய சோகம்...!
இப்படிப்பட்ட மோசமான நிலையில் இருந்தும் கூட, பணம் வாங்கிக்கொண்டு வேட்பாளர்களை நியமித்தது தொண்டர்களை மேலும் சோர்வடையச் செய்தது. சொந்தக் கட்சியினரிடமிருந்தே பணம் பெற்று டிக்கெட் கொடுக்கும் கட்சியால் நேர்மையான ஆட்சி தர முடியுமா என்ற கேள்வியை மக்கள் நேரடியாகவே எழுப்பினர். தொகுதிக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாதவர்களை வேட்பாளர்களாக்கியதால் உள்ளூர் காங்கிரஸார் ஒதுங்கினர்; சிலர் எதிர்முகாமுக்கு வேலை செய்தனர்.
பாரம்பரியமாக முஸ்லிம் ஓட்டுகள் காங்கிரஸுக்கு இருந்தன. இம்முறை அவையும் பெருமளவு நழுவின. AIMIM தலைவர் அசாதுதீன் ஓவைசி கூட்டணிக்கு வர முன்வந்தார்; ஆனால் காங்கிரஸும் RJD-யும் அவரை மதிக்கவே இல்லை. அதன் விளைவு, சீமாஞ்சலில் ஐந்து இடங்களை ஓவைசி கைப்பற்றினார். முஸ்லிம் ஓட்டுகள் பெருமளவு பா.ஜே.டி.-ஐ.ஜே.டி. கூட்டணிக்கே சென்றன.
உள்ளூர் பிரச்சனைகளைப் பேசாமல் “அதானி-அம்பானி, ஓட்டுத் திருட்டு, எஸ்.ஐ.ஆர்.” என்று மட்டுமே பிரசாரம் செய்ததால் மக்கள் காங்கிரஸை முழுமையாகப் புறக்கணித்தனர். எதிரணி உள்ளூர் பிரச்சனைகளைப் பேசி வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணியில் 61 தொகுதிகளை வம்புக்கு கேட்டு வாங்கியதால் RJD-காரர்களிடம் ஒருங்கிணைப்பே இல்லாமல் போனது.
ராகுல் காந்தி தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்புதான் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தார்; அவரது பிரசாரமும் எடுபடவில்லை. பா.ஜே.டி. கூட்டணி ஒரு வருடத்திற்கு முன்பே களப்பணியைத் தொடங்கிவிட்டது; மோடி முதல் உள்ளூர் தொண்டன் வரை பம்பரமாகச் சுற்றினர். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் ராகுலின் பிரசாரமே போதும் என்று உட்கார்ந்து கொண்டனர்.
கட்சிக்குள் கோஷ்டி அரசியலும், கால்வாரும் செயல்களும் தொடர்ந்து நடந்தன. இவையெல்லாம் சேர்ந்து காங்கிரஸை பீகாரில் முற்றிலும் தோற்கடித்துவிட்டன.
“காந்தி குடும்பத்தினர் பிடியில் இருந்து கட்சியை மீட்டு, புதிய தலைமையின் கீழ் கொண்டு வந்தால் மட்டுமே காங்கிரஸை இனியாவது காப்பாற்ற முடியும். இல்லையெனில் இந்தியாவில் காங்கிரஸ் என்ற கட்சி இருந்ததற்கான சுவடுகள்கூட மறைந்துவிடும்” என்று தமிழக காங்கிரஸார் தங்கள் அறிக்கையில் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
பீகார் தோல்வி காங்கிரஸுக்கு ஒரு எச்சரிக்கை மணி. இதை வெறும் மாநிலத் தோல்வியாகக் கடந்து சென்றால், கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்று அக்கட்சியின் உள் வட்டாரங்களே எச்சரிக்கின்றன.
இதையும் படிங்க: கோவை திமுக கோட்டையா இருக்கணும்… நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு...!