சர்வதேச விதிகள் மீறப்படுகின்றன! ட்ரம்ப்பின் வரி விதிப்பு கொள்கைக்கு மேக்ரான் கண்டனம்.!!
உலகப் பொருளாதார மன்றத்தில் அமெரிக்காவின் வரி வதிப்பு கொள்கைக்கு பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில், அமெரிக்காவின் தன்னிச்சையான வர்த்தகக் கொள்கைகள் மற்றும் ஏகாதிபத்தியப் போக்குக்கு எதிராகப் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
உலகப் பொருளாதார மன்றத்தின் உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், தற்போதைய உலக அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல் குறித்துத் தனது ஆழ்ந்த கவலையையும் ஆக்ரோஷத்தையும் வெளிப்படுத்தினார். அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய நாடுகளின் இறக்குமதிப் பொருட்கள் மீது அதிரடியான வரி விதிப்புகளை அறிவித்து வரும் சூழலில், மேக்ரானின் இந்தப் பேச்சு சர்வதேச அரங்கில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
"விதிகளற்ற ஒரு ஆபத்தான உலகத்தை நோக்கி நாம் வேகமாக நகர்ந்து வருகிறோம். பல தசாப்தங்களாகப் பேணிக்காக்கப்பட்ட சர்வதேசச் சட்டங்கள் இன்று சில நாடுகளின் ஏகாதிபத்திய லட்சியங்களால் காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன. இப்போது முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தோன்றும் ஒரே விதி, ‘வல்லமை உள்ளவனுக்கே வெற்றி’ என்கிற பலசாலியின் சட்டமே ஆகும். பிற நாடுகளின் இறையாண்மையை அச்சுறுத்துவதற்காகவும், அவர்களைப் பணிய வைப்பதற்காகவும் வரி விதிப்புகளை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என மேக்ரான் நேரடியாக அமெரிக்காவைக் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: ஆளுநருக்கு ட்ரீட்மென்ட் தேவை! தமிழை அவமதிச்சா சும்மா இருக்க முடியாது! வழக்கு தொடர தமிமுன் அன்சாரி ஆவேசம்!
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டை ஆணித்தரமாகப் பதிவு செய்த அவர், "வலிமை மிக்கவர்களின் சட்டத்திற்கு ஐரோப்பா ஒருபோதும் தலைவணங்காது. நாங்கள் அடிபணிவதையோ அல்லது மிரட்டப்படுவதையோ விரும்பவில்லை; நாங்கள் நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர மரியாதையை மட்டுமே எதிர்பார்க்கிறோம். ஐரோப்பாவின் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" எனத் தனது உரையில் மிக ஆக்ரோஷமாகத் தெரிவித்தார். உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் போட்டிச் சூழல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே ஒரு பெரும் வர்த்தகப் போரை உருவாக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். மேக்ரானின் இந்த அதிரடிப் பேச்சு, உலக நாடுகளின் தலைவர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “வெனிசுலா இனி அமெரிக்கத் தயாரிப்புகளை மட்டுமே வாங்கும்!” டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!