அமெரிக்கா: தீப்பிடித்த சரக்கு விமானம்..!! பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு..!! எடுக்கப்பட்ட ‘பிளாக் பாக்ஸ்’..!!
அமெரிக்கா, கென்டக்கி மாகாணத்தில் நிகழ்ந்த சரக்கு விமான விபத்தில் பலி எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில், லூயிஸ்வில் முகமது அலி சர்வதேச விமான நிலையத்தை விட்டு புறப்படும்போது ஏற்பட்ட UPS சரக்கு விமான விபத்தில் பலி எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் திங்கள் கிழமை (நவம்பர் 4) மாலை 5:15 மணியளவில் (உள்ளூர் நேரம்) நிகழ்ந்தது. விமானத்தின் இடது எஞ்சின் திடீரென தீப்பிடித்து பிரிந்து விழுந்ததால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள தொழிற்சாலைகளில் விழுந்து வெடித்தது.
UPS ஃப்ளைட் 2976 என்று அழைக்கப்படும் இந்த சரக்கு விமானம், ஹவாயின் ஹோனோலுளு நோக்கி புறப்பட்டது. விமானம் தரையில் இருந்து 500 அடி உயரத்தில் இருக்கும்போது இடது இன்ஜின் திடீரென பிரிந்து விழுந்ததாகவும், இதனால் இடது சிறகு தீப்பற்றியதாகவும் விமான நிபுணர்கள் கூறுகின்றனர். விமானம் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள கட்டிடங்களைத் தாக்கி விஸ்வரூப வெடிப்பை ஏற்படுத்தியது. விபத்து இடத்தில் தீப்பரவல் அரை மைல் தொலைவுக்கு பரவியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அமெரிக்காவில் அதிர்ச்சி: தரையில் விழுந்து நொறுங்கிய சரக்கு விமானம்..!! விமானிகளின் கதி என்ன..??
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த மூன்று பணியாளர்களும் உயிரிழந்தனர். மேலும் அருகில் இருந்த ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்குப் பின் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது, ஆனால் புதன்கிழமை காலை மீண்டும் திறக்கப்பட்டது.
அமெரிக்க ஃபெடரல் விமான பாதுகாப்பு நிர்வாகம் (எஃப்ஏஏ) மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (என்டிஎஸ்பி) இந்த விபத்தை விசாரிக்கத் தொடங்கியுள்ளன. விமானத்தின் ‘பிளாக் பாக்ஸ்’ (ஃப்ளைட் டேட்டா ரெகார்டர் மற்றும் காக்பிட் வாய்ஸ் ரெகார்டர்) விபத்து இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. UPS நிறுவனம் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து, “இது நமது நிறுவனத்தின் மிகவும் வேதனைக்குரிய சம்பவம்” என அறிக்கை வெளியிட்டுள்ளது. கென்டாக்கி ஆளுநர் ஆண்டி பெஷியர், “இந்த விபத்து நமது மாநிலத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆதரவு அளிப்போம்” எனத் தெரிவித்தார்.
இந்த விபத்து, அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மோசமான சரக்கு விமான விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. விசாரணை முடிவுகள் வெளியாகும் வரை விமான நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் அதீத எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என விமான நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் விமான பயணிகளின் உயிர் பாதுகாப்பு குறித்து இது புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது. விசாரணை முடிவுகள் வெளியாகும் வரை, பாதிக்கப்பட்டோருக்கு உதவி அளிக்கும் பணிகள் தொடரும்.
இதையும் படிங்க: ஒரே டைம்மில் 2 வேலை..!! அமெரிக்காவில் கையும் களவுமாக சிக்கிய இந்தியர்..!!