அமைச்சர் பண்ணுற காரியமா இது!! மதுரை திமுகவினர் போர்க்கொடி!! மூர்த்திக்கு சிக்கல்!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பதவியை, அமைச்சர் மூர்த்தியின் மனைவி செல்லம்மாளுக்கு வழங்க, மதுரை மாவட்ட தி.மு.க.,வில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், மதுரை மாவட்ட தி.மு.க.வில் உள் கோஷ்டி பூசல் உச்சத்தை அடைந்துள்ளது. அமைச்சர் பி. மூர்த்தியின் மனைவி செல்லம்மாளுக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பதவியை வழங்க முயன்றதால், கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது மதுரையின் 10 சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க.வுக்கு பின்னடைவு ஏற்படுமோ என கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்ட தி.மு.க.வில் அமைச்சர்கள் பி. மூர்த்தி, பி.டி.ஆர். தியாகராஜன், மாவட்டச் செயலாளர்கள் தளபதி, எம்எல்ஏ வெ.மணிமாறன் என நான்கு கோஷ்டிகள் செயல்படுகின்றன. சமீபத்தில், அமைச்சர் மூர்த்தி தனது மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகத்தை விரிவுபடுத்த, மதுரை தெற்கு மற்றும் மாநகர் மாவட்டங்களை 'டம்மி' ஆக்கும் வகையில் நிர்வாகத்தைப் பிரித்து, தனது ஆதரவாளர்களை புதிய நிர்வாகிகளாக நியமித்தார். இதனால், மாவட்டச் செயலாளர்கள் தளபதி, மணிமாறன் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும், மதுரை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நிர்வாகியை மதுரை வடக்கு மாவட்டத்திற்கு மாற்றி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் பதவியும் வழங்கி, மதுரை மேற்கு தொகுதியின் வேட்பாளராக்கும் முயற்சியில் மூர்த்தி ஈடுபட்டுள்ளார். இந்த நடவடிக்கைகளும் கட்சியில் புகைச்சலை உருவாக்கியுள்ளன.
இதையும் படிங்க: புஸ்ஸ் ஆன ஆனந்த்! அதிரடி காட்டும் ஆதவ்! பவர் பிளே ப்ளானுடன் களமிறங்கும் விஜய்!
இதற்கிடையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக இருக்கும் அமைச்சர் தியாகராஜனின் தாய் ருக்மணியின் பதவிக்காலம் வரும் 29-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதைப் பயன்படுத்தி, தனது மனைவி செல்லம்மாளை புதிய தலைவராக நியமிக்க முயன்று வருகிறார் மூர்த்தி.இந்த முடிவை மதுரை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஏற்கவில்லை. அமைச்சர் மூர்த்தியின் மனைவிக்கு பதவி வழங்கக்கூடாது என கட்சி மேலிடத்திடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மதுரை தி.மு.க. வட்டாரங்கள் கூறுகையில், "நடிகர் விஜயின் த.வெ.க. மாநாட்டுக்கு போட்டியாக மதுரையில் பொதுக்குழு நடத்தி பாராட்டைப் பெற்றார் மூர்த்தி. இதனால் துணை முதல்வர் உதயநிதியின் ஆதரவாளராக மாறினார். இப்போது கட்சியில் அதிகாரத் தோரணையில் செயல்படுகிறார்.
இந்த உள் மோதல், தி.மு.க.வின் மதுரை மண்டலத்தில் தேர்தல் உத்தியை பாதிக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கட்சி மேலிடம் இந்தப் பிரச்னைக்கு விரைவான தீர்வு காணுமா என்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: திடீர் சுறுசுறுப்பாகும் திமுக எம்.எல்.ஏ-க்கள்!! அனல் பறக்கும் ஆன்லைன் விளம்பரம்! பக்கா திட்டம்!