×
 

பழிக்கு பழி... திமுக நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்... 4 பேரை அலேக்காக தூக்கிய போலீஸ்...!

கிராங்காடு  திமுக கிளைச் செயாளர் ராஜேந்திரனை நிலப் பிரச்சினை மற்றும் முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக அவரது பங்காளி  குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது

வாழப்பாடி அருகே பெரிய கல்வராயன் மலை பிரதேச பகுதிகளில் உள்ள கீழ்நாடு ஊராட்சியின் கிராங்காடு பகுதியில் சில நாட்களுக்கு முன்பு திமுக கிளைச் செயலாளர் முன்னாள் வனக்குழு தலைவர் ராஜேந்திரன் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தனிப்படை போலீசார் நான்கு பேரை பிடித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ராஜமாணிக்கம், பழனிசாமி, ராஜமாணிக்கத்தின் மனைவி ஜெயக்கொடி, பழனிசாமியின் மருமகன் குழந்தைவேல் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை சேலம் மாவட்டம் வாழப்பாடி உட்கோட்டம்,  கரிய கோவில் காவல் நிலைய எல்லை ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி பெரிய கல்வராயன் மலை கீழ்நாடு ஊராட்சி கிராங்காடு கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் ராஜேந்திரன் என்பவர் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் கீழ்நாடு ஊராட்சியின்  திமுக கிளைச் செயலாளராகவும், முன்னாள் வனக்குழு தலைவராகவும் இருந்து வந்துள்ளார். 

தனது மனைவி சரிதாவுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் மறைந்திருந்து நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முதற்கட்ட  விசாரணையில் நிலத்தகராறு காரணமாக ராஜமாணிக்கம் மற்றும் அவரது அண்ணன் பழனிச்சாமி ஆகியோரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதையும் படிங்க: தஞ்சையில் நிகழ்ந்த கொடூரம்... ஆசிரியை குத்திக் கொலை..! காதலன் வெறிச்செயல்...!

இவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கிராங்காடு பகுதியில் உள்ள நிலம் மற்றும் அதன் வழித்தட பிரச்சனை தொடர்பாக ஆத்தூர் உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்  ராஜேந்திரனுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது. இதனால் பணம் மற்றும் நிலத்தை இழந்ததால் ஆத்திரமடைந்த அவரது பங்காளிகளான ராஜமாணிக்கமும், பழனிசாமியும் ராஜேந்திரனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். 

ராஜமாணிக்கத்தின் மனைவியான ஜெயக்கொடியும், பழனிசாமியின் மருமகனான குழந்தை வேலுவும், ராஜேந்திரன் எங்கு எல்லாம் செல்கிறார்? எத்தனை மணிக்கு வீட்டை விட்டு புறப்படுகிறார்? போன்ற தகவல்களை அவருக்கு தெரியாமல் நோட்டம் விட்டு கண்டுபிடித்துள்ளனர். இதன் அடிப்படையிலேயே கடந்த சனிக்கிழமை மனைவியுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த ராஜேந்திரனை, ராஜமாணிக்கம் மறைந்து வைத்திருந்த தனது நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரையும் கைது செய்த கரிய கோவில் போலீசார், ராஜமாணிக்கத்திடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி, தோட்டா மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் 4 பேர் மீதும் உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தது, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். நிலத்தகராறு காரணமாக பங்காளிகளே திமுக நிர்வாகியை கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  
 

இதையும் படிங்க: தரைப்பாலத்தில் கிடந்த தலையில்லாத முண்டம்... காணாமல் போன இளைஞர் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share