டி.என்.ஏ கண்டுபிடிப்பாளர்!! நோபல் பரிசு வென்ற ஜேம்ஸ் வாட்சன் காலமானார்!
டிஎன்ஏவின் இணை கண்டுபிடிப்பாளரும், நோபல் பரிசு பெற்றவருமான ஜேம்ஸ் வாட்சன் 97 வயதில் காலமானார்.
டிஎன்ஏவின் இரட்டை சுருள் கட்டமைப்பை இணைந்து கண்டறிந்து, நவீன மரபியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்திற்கு அடித்தளமிட்ட அமெரிக்க உயிரியலாளர் ஜேம்ஸ் வாட்சன், 97 வயதில் காலமானார். 1953 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இயற்பியலாளர் பிரான்சிஸ் கிரிக்குடன் இணைந்து டிஎன்ஏவின் கட்டமைப்பை கண்டறிந்த இவரது புரட்சிகரமான பணி, உயிரியலில் திருப்புமுனையாக அமைந்தது.
இந்தக் கண்டுபிடிப்புக்காக இருவரும் 1962 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றனர். அவரது மறைவை, நீண்டகாலமாக பணியாற்றிய லாங் தீவில் உள்ள கோல்ட் ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வகம் உறுதிப்படுத்தியது.
ஜேம்ஸ் வாட்சன் மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர், 1953 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கேவென்டிஷ் ஆய்வகத்தில் டிஎன்ஏவின் இரட்டை சுருள் கட்டமைப்பை கண்டறிந்தனர். இந்தக் கண்டுபிடிப்பு, மரபணு பொறியியல், மரபணு சிகிச்சை, உயிரி தொழில்நுட்பம், புற்றுநோய் ஆராய்ச்சி போன்ற துறைகளுக்கு வழி வகுத்தது.
இதையும் படிங்க: தேஜஸ் போர் விமானங்களுக்கு அமெரிக்காவின் இன்ஜின்கள்!! இந்தியா புது டீல்!! பாதுகாப்பில் அடுத்த லெவல் திட்டம்!!
டிஎன்ஏவை முதன்முதலில் 1869 ஆம் ஆண்டு சுவிஸ் விஞ்ஞானி பிரெட்ரிக் மீஷர் 'நியூக்ளின்' என்று கண்டறிந்தார். ஆனால், அதன் கட்டமைப்பை வாட்சன்-கிரிக் இணை தெளிவுபடுத்தினர். இவர்களுடன் ரோசாலிண்ட் பிராங்க்ளின் மற்றும் மாரிஸ் வில்கின்ஸ் ஆகியோரின் பங்களிப்பும் முக்கியமானது.
ஜேம்ஸ் வாட்சன் யார்?
- பிறப்பு மற்றும் கல்வி: ஏப்ரல் 6, 1928 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் பிறந்த வாட்சன், 19 வயதில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். இந்தியானா பல்கலைக்கழகத்தில் மரபியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
- ஆராய்ச்சி பயணம்: 1951 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கேவென்டிஷ் ஆய்வகத்தில் சேர்ந்து, கிரிக்கைச் சந்தித்து டிஎன்ஏ ஆராய்ச்சியைத் தொடங்கினார்.
- பிற்கால பணி: 1956 ஆம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, இளம் விஞ்ஞானிகளை ஊக்குவித்தார். 1968 ஆம் ஆண்டு கோல்ட் ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வகத்தின் இயக்குநரானார். அங்கு நீண்டகாலம் பணியாற்றினார்.
- நோபல் பரிசு: 1962 ஆம் ஆண்டு கிரிக், வில்கின்ஸுடன் இணைந்து மருத்துவ நோபல் பரிசு பெற்றார்.
வாட்சனின் மறைவுக்கு உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். “உயிரியலின் வரலாற்றை மாற்றியமைத்த விஞ்ஞானி” என அவரைப் புகழ்ந்துள்ளனர். கோல்ட் ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வகம், “அவரது பார்வை மற்றும் தலைமை, ஆய்வகத்தை உலகத் தரம் வாய்ந்த மையமாக உருவாக்கியது” எனக் கூறியது. அவரது கண்டுபிடிப்பு, இன்றைய மருத்துவம், தடுப்பூசி, புற்றுநோய் சிகிச்சை போன்றவற்றுக்கு அடிப்படையாக உள்ளது.
வாட்சன், தனது ஆராய்ச்சி வாழ்க்கையில் சில சர்ச்சைகளையும் சந்தித்தார். 2007 ஆம் ஆண்டு இனம் சார்ந்த கருத்துக்கள் காரணமாக கோல்ட் ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வகத்தின் சான்சலர் பதவியில் இருந்து விலகினார். இருப்பினும், அவரது டிஎன்ஏ கண்டுபிடிப்பு உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டது. அவரது மறைவு, உயிரியல் துறையில் ஒரு யுகத்தின் முடிவாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இந்தியர்கள்! மாலியில் அரங்கேறிய அவலம்!! உயிருடன் மீட்கப்படுவார்களா?!