"ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது" - உறுதியளித்தாரா மோடி? - குட்டையைக் குழப்பும் ட்ரம்ப்...!
ரஷ்யாவிலிருந்து இனி எண்ணெய் வாங்க மாட்டேன் என்று இந்திய பிரதமர் மோடி உறுதியளித்ததாக டிரம்ப் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-ரஷ்யா எண்ணெய் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்தியா மீது கூடுதல் வரிகளை விதித்த டிரம்ப், தற்போது முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ரஷ்யாவிலிருந்து இனி எண்ணெய் வாங்க மாட்டேன் என்று இந்திய பிரதமர் மோடி உறுதியளித்ததாக டிரம்ப் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து இந்தியாவை விமர்சித்து வருகிறார். குறிப்பாக, ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான எண்ணெய் ஒப்பந்தத்தை டிரம்ப் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருகிறார். இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கி அதிக விலைக்கு விற்று லாபம் ஈட்டுவதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். இந்தியாவின் இந்த நடவடிக்கைகள் உக்ரைன் போரை ஆதரிப்பதாக குற்றச்சாட்டிய டிரம்ப், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது கூடுதல் வரிகளை விதித்துள்ளார். இந்த சூழலில், டொனால்ட் டிரம்ப் இந்தியா இனி ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்காது என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்காது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனக்கு உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருப்பது உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது ரஷ்யாவை தனிமைப்படுத்தும் முயற்சிகளில் ஒரு பெரிய படி என்றும், ரஷ்யா-உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "Really you are Beautiful"..!! மெலோனியின் அழகை வர்ணித்த டிரம்ப்..! எகிப்து மாநாட்டில் சிரிப்பலை..!!
உக்ரைனில் ரஷ்யாவின் போரை அடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் மாஸ்கோவிற்கு பொருளாதார ரீதியாக தீங்கு விளைவிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நடவடிக்கையின் ஒருபகுதியாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் முக்கிய நாடான இந்தியாவை குறிவைத்தார். இந்த விவகாரத்தில் இந்தியாவின் மீது கோபமாக இருக்கும் டிரம்ப், இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரியை விதித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சூழலில், ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்ற டிரம்ப்பின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் விவகாரத்தில் நான் மகிழ்ச்சியாக இல்லை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இனி ரஷ்யாவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என எனக்கு உறுதியளித்துள்ளார். இது ஒரு பெரிய முன்னேற்றம். இப்போது சீனாவின் முறை. அந்த நாட்டிற்கும் அழுத்தம் கொடுத்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவோம்” எனக்குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி உண்மையில் டிரம்பிற்கு அத்தகைய உறுதிமொழியை அளித்தாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இல்லை. அதேபோல், எண்ணெய் கொள்முதல் குறித்து இந்திய அரசாங்கமும் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காசா அமைதி திட்ட ஒப்பந்தம்..!! முதல் நபராக கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்..!