×
 

எகிறும் எபோலா பாதிப்பு! கட்டுக்கடங்காமல் பரவுவதால் அதிர்ச்சி! 10 ஆப்ரிக்க நாடுகளுக்கு பறந்தது அலர்ட்!

காங்கோவில் 'எபோலா' வைரஸ் பாதிப்பின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஒட்டுமொத்த ஆப்ரிக்க கண்டத்திற்கே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கின்ஷாசா: மத்திய ஆப்ரிக்க நாடான டெமாக்ரடிக் ரிபப்ளிக் ஆஃப் காங்கோவில் (காங்கோ) எபோலா வைரஸ் வேகமாகப் பரவி வருவது உலக சுகாதார அமைப்பை (WHO) கவலைக்குள்ளாக்கியுள்ளது. இந்த வைரஸ் தொற்று ஒரு தீவிரமான மற்றும் பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்தும் நோயாக அறியப்படுகிறது. உடல் திரவங்கள் வாயிலாக – ரத்தம், வியர்வை, விந்து உள்ளிட்டவை – இது எளிதில் பரவும் தன்மை கொண்டது.

தற்போது பரவி வரும் ‘புண்டிபுக்யோ’ (Bundibugyo) வகை எபோலா வைரஸுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ, சிகிச்சை மருந்துகளோ இல்லை. இதன் வீரியத்தை உணர்ந்த உலக சுகாதார அமைப்பு, இந்த நிலையை உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக (PHEIC) அறிவித்துள்ளது. காங்கோவின் இடுரி மாகாணத்தில் தொடங்கிய இந்தப் பரவல், அண்டை நாடான உகாண்டாவுக்கும் பரவியுள்ளது.

இந்த வைரஸ் அண்டை நாடுகளான அங்கோலா, புருண்டி, எத்தியோப்பியா, கென்யா, ருவாண்டா, தெற்கு சூடான், தான்சானியா, ஜாம்பியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவும் அபாயம் அதிகம் உள்ளதாக WHO எச்சரித்துள்ளது. எனவே, உடனடியாக சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விஜய்க்கு ஆதரவா..? கட்சித் தாவல் சட்டம் பாயணும்..! போர்க்கொடி தூக்கிய EPS தரப்பு..!!

இந்த நிலைமை காரணமாக இந்திய அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 4-வது இந்திய-ஆப்ரிக்க கூட்டமைப்பு உச்சி மாநாட்டை ஒத்திவைத்துள்ளது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் சுகாதாரக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

எபோலா பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அல்லது அந்த நாடுகள் வழியாகப் பயணம் செய்து வருபவர்கள், உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக விமான நிலைய சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எபோலா அறிகுறிகளாக காய்ச்சல், உடல் வலி, பலவீனம், வாந்தி மற்றும் சில சமயங்களில் இரத்தப்போக்கு ஆகியவை காணப்படுகின்றன. இந்த நோய் வேகமாக மோசமடைந்து உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள பாதுகாப்பு சவால்கள், மக்கள் இடப்பெயர்வு மற்றும் எல்லைத் தாண்டிய பயணங்கள் காரணமாக பரவல் வேகமெடுக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நேரம் இது. காங்கோவில் தொடங்கிய இந்த எபோலா அச்சுறுத்தல், விரைவில் கட்டுப்படுத்தப்படாவிட்டால் ஆப்ரிக்கா முழுவதும் பெரும் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணை திறப்பது கட்டாயம்! இல்லையென்றால் இன்னொரு வழியில் திறக்கப்படும்! மார்கோ வார்னிங்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share