வஞ்சிக்கும் திமுக.. 4 முறை மின்கட்டண உயர்வு! அதிமுக ஆட்சி அமைந்ததும்? வாக்குறுதிகளை கொடுத்த இபிஎஸ்..!
திமுக ஆட்சியில் மின்கட்டணம் நான்கு முறை உயர்ந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல் சுற்றுப்பயணத்தைத் தொடங்கி உள்ளார். இந்த சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் இருந்து அவரது சுற்றுப்பயணம் தொடங்கிய நிலையில், ஜூலை 21 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் கட்டம் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது.
இதில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மற்றும் பேராவூரணி தொகுதிகள் அடங்குகின்றன. தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கி, மக்களைச் சந்தித்து, திமுக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்துவதும், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துரைப்பதும் இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில உரிமைகள், அமைதி, வளர்ச்சி, மற்றும் செழிப்பை மீட்டெடுப்பதாக எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார். இந்த நிலையில், அவரது சுற்றுப்பயணம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரூ.7500 கோடியில் என்னென்ன திட்டங்கள்..? வெளியான முக்கிய அறிவிப்பு..!
இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் விவசாயிகளோடு கலந்துரையாடினார். அவர்களோடு கலந்துரையாடி, குறைகளை எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்தார். தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். தேக்கம்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்த கலந்துரையாடலில், விவசாயிகளின் முக்கிய பிரச்சனைகளான பயிர் விலை, நீர்ப்பாசன வசதிகள், மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ளூர் ஏஜெண்டுகளின் ஆதிக்கம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன. அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி,நானும் ஒரு விவசாயி தான் விவசாயிகளின் பிரச்சினைகள் அனைத்தும் எனக்கு தெரியும் என கூறினார். விவசாயிகளுக்கு 2,428 கோடி வறட்சி நிதி கொடுத்தது அதிமுக ஆட்சியில் தான் என்றும் அதிமுக ஆட்சியில் பசுமை வீடு திட்டம் மூலம் 10,000 வீடுகள் கட்டித் தரப்பட்டன என தெரிவித்தார்.
அதிமுக ஆட்சி அமைந்ததும் செங்கல் சூளை உற்பத்தியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் எனக் கூறிய அவர், திமுக ஆட்சி 4 முறை மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சியில் கைத்தறி துணி விற்பனை ஆகாத போது 150 கோடி மானியம் வழங்கப்பட்டது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: உணவுப்படியை உயர்த்தாத முதல்வருக்கு வெற்று விளம்பரம்.. அண்ணாமலை கடும் கண்டனம்..!
 by
 by
                                    