தெருக்களில் உள்ள சாதி பெயர்களை அகற்றுவதை உறுதி செய்க! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை அகற்றுவதை உறுதி செய்யத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை அகற்றுவது தொடர்பான அரசு உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
குற்ற வழக்கு ஒன்றின் முதல் தகவல் அறிக்கையில் சாதி பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய உயர்நீதிமன்ற நீதிபதி என். ரமேஷ், தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாகத் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றப் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
தெருக்கள் மற்றும் சாலைகளில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை முழுமையாக நீக்க வேண்டும் எனப் பழனிச்சாமி தலைமையிலான அன்றைய அரசே கடந்த 1978-ஆம் ஆண்டே அரசாணை வெளியிட்டுள்ளதை உயர்நீதிமன்ற நீதிபதி என். ரமேஷ் தனது உத்தரவில் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: புது ரூல்ஸ்..!! விசாரணைக்கு வந்தால் துன்புறுத்தக் கூடாது..! காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..!
ஆதிதிராவிடர் நலத்துறையை சமூக நீதித்துறை எனப் பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களில் நிலவும் சாதிப் பெயர்களை ஒட்டுமொத்தமாக அகற்றி உத்தரவை நடைமுறைப்படுத்த இதுவே மிக சரியான தருணம் என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சாதி அடையாளங்களை முழுமையாகக் களையும் வகையில் இந்த விவகாரத்தை முக்கியமாகக் கருதி தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெடிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனை... "அப்படி சொல்லல"..! ஹைகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்..!!