×
 

கோர்ட்டு அவமதிப்பு வழக்கு.. வங்காளதேச Ex. பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் ஜெயில்..!

வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு ஆட்சி செய்து வந்தது.  கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில், வங்காளதேச விடுதலை போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு, அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் வன்முறையாக வெடித்தது. இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு முடிவு ஏற்படுத்த வலியுறுத்தி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நாட்டில் பதற்ற நிலை ஏற்பட்டது.

இதனிடையே தீவிர போராட்டம் தொடர்ச்சியாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார். வங்காளதேசத்தின் டாக்கா நகரில் இருந்து, சகோதரியுடன் ராணுவ விமானத்தில் புறப்பட்ட ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.  

இதையும் படிங்க: அஜித்குமார் கொலை அரச பயங்கரவாதம்.. திருமாவளவன் காட்டம்..!

ஹசீனா மீது 2024 ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடந்த மாணவர் போராட்டங்களின் போது நடந்த வன்முறைகளுக்கு பொறுப்பாக்கப்பட்டு, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் (crimes against humanity) உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்தப் போராட்டங்களில் சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இவை தொடர்பாக மே 2025 முதல் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (International Crimes Tribunal - ICT) அவமதிப்பு வழக்கில் ஆறு மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பு இன்று, நீதிபதி முகமது கோலம் மொர்துசா மொசும்தர் தலைமையிலான மூவர் அடங்கிய தீர்ப்பாயத்தால் அறிவிக்கப்பட்டது. இது ஷேக் ஹசீனா கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி அன்று ஆட்சி கவிழ்ந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்ற பிறகு அவருக்கு விதிக்கப்பட்ட முதல் தண்டனையாகும்.

2024 அக்டோபரில் ஷேக் ஹசீனா, கைபந்தா மாவட்டத்தின் கோபிந்தகஞ்சைச் சேர்ந்த ஷாகில் அகந்த் புல்புல் என்பவருடன் தொலைபேசியில் பேசிய உரையாடல் கசிந்தது. அதில், “எனக்கு எதிராக 227 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, ஆகவே எனக்கு 227 பேரைக் கொல்ல உரிமை உள்ளது” என்று ஹசீனா கூறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் பேச்சு நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்பட்டது.

இந்த உரையாடல் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, தீர்ப்பாயம் இதனை நீதித்துறைக்கு எதிரான அவமதிப்பாகக் கருதி, ஹசீனாவுக்கு ஆறு மாதமும், புல்புலுக்கு இரண்டு மாத சிறைத் தண்டனையும் விதித்தது. 

ஹசீனா தற்போது இந்தியாவில் டெல்லியில் பாதுகாப்பான இடத்தில் தங்கியுள்ளார். வங்காளதேச அரசு அவரை நாடு கடத்தக் கோரி இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

இதையும் படிங்க: பாக்., சீனா தலையில் பேரிடி.. ஜெய்சங்கரின் ராஜதந்திரம் மாஸ்.. குவாட் மாநாட்டில் சம்பவம் செய்த இந்தியா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share