சதுரகிரியை சூழ்ந்த காட்டுத்தீ..!! பக்தர்கள் மலைக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை..!!
நேற்று மட்டும் 12,000-க்கும் மேற்பட்டோர் மலையேறி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தாணிப்பாறை வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் மலையேற மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் தற்காலிகத் தடை விதித்துள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலையில் சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோயில், சித்தர்கள் வாழ்ந்த புனிதத் தலமாகவும் ‘தென் கயிலை’ என்றும் போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் ஆடி அமாவாசை தினத்தில் இங்கு சுந்தர மகாலிங்கத்தை தரிசிப்பது மிகுந்த சிறப்புடையதாக கருதப்படுவதால், இந்த ஆண்டு ஆகஸ்ட் 13 வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் வழக்கத்தை விட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் குவிந்தனர். நேற்று மட்டும் 12,000-க்கும் மேற்பட்டோர் மலையேறி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு தாணிப்பாறை மற்றும் அருகிலுள்ள ரத்தினக்கல், நெடுங்குளம் போன்ற வனப்பகுதிகளில் தீ பரவத் தொடங்கியது. காற்றின் வேகம் காரணமாக அது மலையின் கீழ்பகுதியை நோக்கி வேகமாக விரிவடைந்தது. தீயின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு பக்தர்களின் உயிர்பாதுகாப்பை முன்னிறுத்தி, சூழல் சீராகும் வரை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சதுரகிரி மலையேறத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: செங்கோட்டையில் இந்த ஆண்டு மாறப்போகும் முக்கிய நடைமுறை! சுதந்திர தின நிகழ்ச்சியில் புதிய மாற்றம்!
ஏற்கனவே மலையில் இருந்த பக்தர்கள் அனைவரும் வனத்துறை வழிகாட்டுதலின்படி பாதுகாப்பாக அடிவாரம் நோக்கித் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். வனத்துறை சிறப்புப் பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் கூடுதல் படைகள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியிலும், காற்றின் திசையைக் கண்காணிக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தத் திடீர் தடையால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.
காட்டுத்தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட பிறகே, ஆடி அமாவாசை நாளில் பக்தர்களை மீண்டும் அனுமதிப்பது குறித்து களநிலவரத்தை ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பே முன்னுரிமை என்பதால், பக்தர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு கோரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா கைவிட்டுச் சென்ற திட்டம்! வேகம் காட்டும் முதல்வர் விஜய்?! பரபரக்கும் பட்டினப்பாக்கம்!