போருக்கு தயாரா இருங்க! வம்பிழுக்கும் அமெரிக்கா! படைகளை தயார் செய்யும் கிரீன்லாந்து! அதிகரிக்கும் பதட்டம்!
அமெரிக்க அதிபர் டிரம்பின் கையகப்படுத்தும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், ''ராணுவ மோதலை நிராகரிக்க முடியாது. மக்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்'' என கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் ப்ரெட்ரிக் நீல்சன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கிரீன்லாந்து தீவை கையகப்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-பிரெட்ரிக் நீல்சன் அதிர்ச்சி தரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, ஆர்ட்டிக் பகுதியில் மூலோபாய ரீதியாக மிக முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. டென்மார்க்கின் தன்னாட்சி பகுதியாக இருக்கும் இத்தீவு, தற்போது அமெரிக்காவின் பாதுகாப்பு காரணங்களுக்காக டிரம்ப் அரசால் தீவிரமாக விரும்பப்படுகிறது.
டிரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியுள்ளார். ரஷ்யா மற்றும் சீனாவின் ஆர்ட்டிக் ஆதிக்கத்தை தடுக்க இது அவசியம் என அவர் கூறி வருகிறார்.
இதையும் படிங்க: கிரீன்லாந்தை கைப்பற்ற களமிறங்கும் அமெரிக்க ராணுவம்?!! அதிபர் ட்ரம்ப் சொல்வது என்ன?!
சமீபத்தில், அமெரிக்க கொடியுடன் கிரீன்லாந்தில் நிற்பது போன்ற படத்தை அவர் பகிர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டென்மார்க் தனது ராணுவ இருப்பை கிரீன்லாந்தில் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நேச நாடுகளும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், கிரீன்லாந்து தலைநகர் நூக்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் ஜென்ஸ்-பிரெட்ரிக் நீல்சன் கூறியதாவது: “ராணுவ மோதலை முற்றிலும் நிராகரிக்க முடியாது. அது சாத்தியமில்லை என்று யாரும் உறுதியாக கூற முடியாது. எனவே, மக்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். ராணுவ படையெடுப்பு ஏற்படும் சூழலை எதிர்கொள்ள அதிகாரிகள் தயார்படுத்தப்பட வேண்டும்.” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “இத்தகைய சூழ்நிலை தற்போது உடனடியாக ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், அன்றாட வாழ்க்கையில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் அதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும்.
குறைந்தது ஐந்து நாட்களுக்கு போதுமான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வீடுகளில் சேமித்து வைக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். முக்கிய உள்ளூர் அதிகாரிகளை கொண்ட ஒரு பணிக்குழு அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
கிரீன்லாந்தின் நிதியமைச்சரும் முன்னாள் பிரதமருமான மியூட் எகெட், “அதிகரித்து வரும் அழுத்தங்களை எதிர்கொள்ள அனைத்து சூழ்நிலைகளுக்கும் தயாராக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே, டிரம்ப் பிப்ரவரி 1 முதல் டென்மார்க் உட்பட எட்டு நேட்டோ நட்பு நாடுகளின் ஏற்றுமதி பொருட்களுக்கு 10% வரி விதிக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
இது பின்னர் 25% ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் அமெரிக்கா-ஐரோப்பா இடையேயான பதட்டங்கள் உச்சத்தை தொட்டுள்ளன. நேட்டோ கூட்டணியே ஆபத்தில் உள்ளதாக எச்சரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்த சூழலில், கிரீன்லாந்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு “நாங்கள் விற்கப்படவில்லை” என்று குரல் எழுப்பி வருகின்றனர். உலக அரங்கில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் இந்த அணுகுமுறை சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், நேட்டோவை பலவீனப்படுத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: பேசிப்பாப்போம்! செட் ஆகலைனா அவ்ளோதான்! கிரின்லாந்தை மிரட்டும் ட்ரம்ப்!!