வந்தே மாதரம்.. உணர்ச்சி பொங்க முழங்கிய கிராமம்.. முரளி நாயக் உடலுக்கு பவன் கல்யாண் அஞ்சலி..!
பாகிஸ்தான் தாக்குதலில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் முரளி நாயக், உடலுக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஏப்ரல் 22ம் தேதி நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 7ம் தேதி அதிகாலை ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது. அன்று முதல் இந்திய எல்லை பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன், ஏவுகணைகளை வீசி தாக்கியது. நமது ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்த நிலையில், 8ம் தேதி காஷ்மீர் எல்லை கட்டுப்பாடு பகுதியில் நடந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் முரளி நாயக் வீர மரணம் அடைந்தார். அவருக்கு வயது 23.
அவர் ஆந்திரா சத்யசாய் மாவட்டத்தை சேர்ந்தவர். பாகிஸ்தானின் தாக்குதலில் முரளிநாயக் வீரமரணம் அடைந்தது ஆந்திரா மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ராணுவ வீரர் முரளி நாயக்கின் மறைவுக்கு அவரது குடும்பத்தினரிடம் போனில் இரங்கல் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூரில் வீரமரணம் அடைந்த ஜவான் முரளி நாயக்கின் தியாகத்தை இந்திய தேசம் ஒருபோதும் மறக்காது.
இதையும் படிங்க: தமிழர்களுக்காக காட்டமாக குரல் எழுப்பிய பவன் கல்யாண் - ஏன் இந்த திடீர் பாசம்?
தாய்நாட்டிற்காக தனது உயிரைத் தியாகம் செய்த முரளியின் தியாகத்தை முழு நாடும் நினைவில் கொள்ளும் என்றும் சந்திரபாபு கூறினார். முரளி நாயக் குடும்பத்தினரை அமைச்சர் சவிதா நேரில் சந்தித்து ஆறுதல் கூறி மாநில அரசு சார்பில் 5 லட்சம் காசோலையை வழங்கினார். அப்போது முரளி நாயக் தாய் கதறி அழுத காட்சிகள் காண்போர் நெஞ்சை உலுக்கியது. கோரண்ட்லா நகரின் முக்கிய சந்திப்பில் வீர ஜவான் முரளி நாயக் சிலை அமைக்கப்படும் என அமைச்சர் சவிதா கூறினார்.
இந்த நிலையில் முரளிநாயக் மறைவிற்கு துணை முதல்வர் பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்தார். ஆந்திராவின் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஆபரேஷன் சிந்தூரில்' வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் (ஜவான்) முரளி நாயக்கின் தியாகத்தை இந்திய தேசம் ஒருபோதும் மறக்காது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் எதிரி படைகளை எதிர்த்து போராடி வீர மரணம் அடைந்த முரளி நாயக்கின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஆந்திரப்பிரதேஷ் மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், சுல்லி தண்டாவைச் சேர்ந்த இந்த இளம் ஜவான், நாட்டின் பாதுகாப்புக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு போர்க்களத்தில் தியாகியானார். இந்த மாவிரனின் பெற்றோரான ஜோதி பாய். ஸ்ரீராம் நாயக் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆந்திர மாநில அரசு குடும்பத்திற்கு அனைத்து ஆதரவையும் வழங்கும் என தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் முரளி நாயக்கின் உடலை நேற்று மாலை சொந்த ஊருக்கு ராணுவ அதிகாரிகள் கொண்டு வந்தனர். அப்போது இளைஞர்கள், கிராம மக்கள் வந்தே மாதரம் என முழக்கமிட்டு பேரணியாக வந்தனர். நேற்று இரவில் இருந்து உறவினர்கள், பொதுமக்கள் முரளி நாயக் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். இன்று ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வி அமைச்சர் நாரா லோகேஷ், வருவாய் அமைச்சர் சத்திய பிரசாத், சுகாதார அமைச்சர் சத்யகுமார் யாதவ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
முரளி நாயக் பெற்றோர் ஸ்ரீராம் நாயக் – ஜோதிபாய்க்கு ஆறுதல் கூறினர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் பவன் கல்யாண், 23 வயதான முரளி நாயக் ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு கிடைத்தும் அதில் செல்லாமல் நாட்டிற்காக சேவை செய்ய ராணுவ பணியில் சேர்ந்தார். இளம் வயதிலேயே வீர மரணம் அடைந்த அவரது வீரத்தை நாடு எப்போதும் நினைவில் வைத்து கொள்ளும் என துணை முதல்வர் பவன் கல்யாண் கூறினார்.
அரசு சார்பில் அவரது குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதி உதவி, 5 ஏக்கர் விவசாய நிலம், 300 சதுர அடியில் வீட்டு மனை, முரளி நாயக்கின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். எனது தனிப்பட்ட நிதியில் இருந்து 25 லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்குவேன் என்றார். முரளி நாயக் வசித்த மாவட்டமான ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் சிலை அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
இதையும் படிங்க: மத்தியஸ்தம் செய்ய தயார்.. 1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னை.. எல்லை விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் ட்ரம்ப்..!