×
 

டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு! நாடாளுமன்ற நுழைவாயில்கள் அதிரடியாக மூடல்!

டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பிரம்மாண்டப் பேரணியாக வந்ததால், நாடாளுமன்றத்தின் அனைத்து நுழைவாயில்களும் பூட்டப்பட்டுள்ளன.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி, டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக முன்னேற முயன்ற 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' தொண்டர்களால் டெல்லி மாநகரமே உச்சகட்டப் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது. பேரணியாக வந்தவர்கள் நாடாளுமன்ற எல்லைக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுக்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடாளுமன்றத்தின் முக்கிய நுழைவாயில்கள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டுப் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

நாடாளுமன்றப் பகுதியை ஒட்டித் தடையை மீறி போராட்டக்காரர்கள் குவிந்து வருவதால், டெல்லி காவல்துறையினருடன் இணைந்து நூற்றுக்கணக்கான துணை ராணுவப் படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்களைக் கலைக்கத் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் அதிநவீன வஜ்ரா வாகனங்கள் மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசும் கருவிகளுடன் பாதுகாப்புப் படையினர் முழுத் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். 

போராட்டக்காரர்கள் அத்துமீறி நாடாளுமன்றத்தின் உயர்தடுப்பு வளையங்களை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய முயன்றாலோ அல்லது வன்முறையில் ஈடுபட்டாலோ, அசம்பாவிதங்களைத் தவிர்க்கச் சட்டப்படி துப்பாக்கிச்சூடு நடத்தவும் தயங்க மாட்டோம் எனப் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: டெல்லியில் "கரப்பான்பூச்சி ஜனதா கட்சி" போராட்டம்! சோனம் வான்சுக்கிற்கு நேரில் ஆதரவளித்த திமுக எம்பி ஆ.ராசா!

அரசியல் நையாண்டி இயக்கமாகத் தொடங்கப்பட்ட இந்த 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி', சமீபத்தில் வேலையில்லா இளைஞர்கள் குறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்ததாகக் கூறப்படும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் உருவானது.

தற்போது இந்த இயக்கம், நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட இளைஞர்கள் சார்ந்த பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கையில் எடுத்து டெல்லியில் தொடர் களப் போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், தடையை மீறி இந்த அமைப்பினர் நடத்திய அதிரடிப் பேரணி டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' எக்ஸ் கணக்கு தடையை நீக்க டெல்லி ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share