×
 

செங்கடலில் இஸ்ரேலிய கப்பல் போக்குவரத்துக்கு தடை..!! ஹவுதி அமைப்பின் புதிய எச்சரிக்கை..!!

செங்கடலை பயன்படுத்த ஹவுதி அமைப்பு இஸ்ரேலுக்கு தடை விதித்துள்ளது.

ஈரானின் ஆதரவுப்பெற்ற ஏமனின் ஹவுதி ஆயுதக் குழு செங்கடல் பகுதியில் இஸ்ரேலிய கடல் போக்குவரத்துக்கு முழுமையான தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் உலக வர்த்தகத்தின் முக்கிய நீர்வழிகளில் ஒன்றான பாப் எல்-மந்தாப் நீரிணையை இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு மூடுவதாகவும் எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பு மத்திய கிழக்குப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

ஹவுதி ஆயுதப் படைகள் வெளியிட்ட அறிக்கையில், “செங்கடலில் இஸ்ரேலிய கடல்வழிப் போக்குவரத்திற்கு முழுமையான மற்றும் மொத்தத் தடையை நாங்கள் அறிவிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்து, இஸ்ரேல் நாட்டுக் கப்பல்கள் அல்லது இஸ்ரேலுடன் தொடர்புடைய வணிகக் கப்பல்களின் இயக்கங்கள் அனைத்தும் தங்கள் ராணுவ இலக்குகளாகக் கருதப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாகவே இஸ்ரேலின் முக்கிய இலக்குகளை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஹவுதிகள் கூறியுள்ளனர். இருப்பினும், இஸ்ரேல் தரப்பு இந்தத் தாக்குதல்களை தங்கள் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக இடைமறித்ததாக அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை காசா, லெபனான் மற்றும் ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் ராணுவத் தாக்குதல்களுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்டதாக ஹவுதி அமைப்பு விளக்கியுள்ளது. ஏற்கனவே ஈரான் அரசால் ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், இந்தப் புதிய தடை இஸ்ரேலின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலிய சரக்குக் கப்பல்கள் இனி தெற்கு ஆப்பிரிக்காவின் கேப் ஆஃப் குட் ஹோப் முனையைச் சுற்றி நீண்ட தூரப் பாதையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது போக்குவரத்துச் செலவை பல மடங்கு அதிகரிக்கும் மற்றும் சரக்கு ஏற்றுமதி-இறக்குமதியில் தாமதத்தை ஏற்படுத்தும். 

இதையும் படிங்க: ஓமனில் ஈரான் ட்ரோன் தாக்குதல்!! நீடிக்கும் பரபரப்பு!! கச்சா எண்ணெய் ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தம்!

பாப் எல்-மந்தாப் நீரிணை உலக வர்த்தகத்தின் முக்கிய நுழைவாயில். இங்கு ஏற்படும் தடங்கல் சூயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பா-ஆசிய வர்த்தகத்தையும் பாதிக்கும். ஏற்கெனவே ஹவுதி தாக்குதல்கள் காரணமாக பல சர்வதேச கப்பல் நிறுவனங்கள் மாற்றுப் பாதைகளை நாடியுள்ளன. இஸ்ரேலின் ஐலத் துறைமுகம் வர்த்தகச் சரிவால் நிதி நெருக்கடியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பதற்றம் உலக எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தலாம். மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல் மோதல் விரிவடைந்து வரும் நிலையில், ஹவுதிகளின் இந்த அறிவிப்பு பிராந்திய அமைதிக்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சமூகம் இந்த விவகாரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. 
 

இதையும் படிங்க: வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்? முறியடித்து விட்டதாக அமெரிக்கா அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share