ஐதராபாத் பயணிகளின் உடல் சவுதியிலேயே நல்லடக்கம்... இந்தியா கொண்டு வரப்படாததற்கு காரணங்கள் என்னென்ன?
பேருந்து தீ விபத்தில் உயிரிழந்த ஐதராபாத் பயணிகள் 45 பேரின் உடல்கள் சவுதியிலேயே நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
ஐதராபாத்திலிருந்து சவுதி அரேபியாவிலுள்ள மெக்கா மற்றும் மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட 45 யாத்ரீகர்கள் பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மெக்காவில் தொழுகையை முடித்துவிட்டு, மதீனாவிற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஜோரா என்ற இடத்தில் பேருந்து சென்றுகொண்டிருந்த போது, டீசல் ஏற்றிவந்த லாரி ஒன்று பேருந்தில் மோதியுள்ளது. இதில் பேருந்து தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்து, இந்திய நேரப்படி அதிகாலை 1:30 மணியளவில் மதீனாவிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முப்ரிஹாத் என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது. அந்த நேரத்தில் பல பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததால், தீப்பிடித்து எரிந்த பேருந்தில் இருந்து அவர்களால் தப்ப முடியவில்லை.
இதில் 18 பெண்கள், 10 சிறுவர்கள், 17 ஆண்கள் உட்பட 45 பேர் தீயில் கருகி பலியாகினர். இந்த கோர விபத்தில் ஐதராபாத் ராம் நகரை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர் இதில் ஒன்பது பேர் குழந்தைகள் ஆவார். இந்த விபத்தில் அப்துல் ஷோயப் எனும் வயதான நபர் ஒருவர் மட்டுமே உயிர் தப்பிய நிலையில், அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விவசாயிகள் வயிற்றில் அடித்த திமுக… பிராயச்சித்தம் தேடுங்க… விளாசிய நயினார்…!
இந்நிலையில் மெக்கா பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை சவுதியிலேயே நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
இதற்கான சில காரணங்கள் வெளியாகியுள்ளன. மோசமான மற்றும் தீவிரமான தீக்காயங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியாவிற்கு அனுப்புவது மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளது. அடுத்ததாக உயிரிழந்தவர்களின் அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை தேவைப்படுகிறது. இதற்கான மாதிரிகளை இந்தியாவில் இருந்து சேகரித்து, பரிசோதனை செய்து, முடிவுகள் வெளியான பிறகு அந்தந்த உடல்களை அந்தந்த நபர்களின் குடும்பத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அதற்கு நீண்ட காலஅவகாசம் தேவைப்படும் என்பதால் இறந்தவர்களின் உடல்களை சவுதி அரேபியாவில் நல்லடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே சவுதி அரேபியாவில் மரணிக்கும் பிற நாட்டவர்களின் உடலை சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் சம்மதத்துடன் அங்கேயே நல்லடக்கம் செய்யும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. அதன்படியே ஹைதராபாத் யாத்தீரிகர்களின் உடல்களும் அவர்களது குடும்பத்தினரின் சம்மதத்துடன் சவுதியிலேயே நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திலிருந்து தலா நான்கு பேரை சவுதியில் நடைபெறும் இறுதிச்சடங்கில் பங்கேற்க வைக்க தெலுங்கான அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் சவூதி பேருந்து விபத்தில் உயிரிழந்த 45 பேரில் குடும்பங்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாலியல் உறவுக்கு அழைத்து ஆபாச செய்கை!! பெண் சுற்றுலா பயணியிடம் அத்துமீறிய ஆசாமி!