×
 

ஈரான்-இஸ்ரேல் போர்: 30 நாள் தான்.. ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கலாம்..!! அமெரிக்கா பர்மிஷன்..!!

30 நாட்கள் மட்டும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அனுமதி அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான போர் பதற்றம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் அணு ஆயுத திட்டங்களுக்கு எதிராக திடீர் தாக்குதலைத் தொடங்கின. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவரான அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இது ஈரானுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலடியாக ஈரான் ஆவேசமாக தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும், வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும் குறிவைத்து தாக்கி வருகிறது. இந்தப் போர் தொடங்கி இன்றுடன் ஏழு நாட்களை எட்டியுள்ளது. இரு தரப்பினரும் தொடர்ந்து ஒருவரையொருவர் தாக்கி வருவதால், பிராந்தியம் முழுவதும் பதற்றம் உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்ய ரெடி..!! ரஷ்யா அதிரடி அறிவிப்பு..!!

இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதனால் அந்த முக்கியமான கடல் பாதையில் சுமார் 90 சதவீத கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு இந்த வழியாகவே செல்கிறது. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலைகள் மேலும் உயரும் அபாயம் உருவாகியுள்ளது.இருப்பினும், இந்தியாவில் தற்போது எரிபொருள் விலைகளில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படவில்லை. ஆனால், நெருக்கடி தொடர்ந்தால் விரைவில் விலை உயர்வு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.இந்தப் போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தனது எரிசக்தி தேவைகளில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தை வளைகுடா நாடுகளில் இருந்து பெறுகிறது. இதில் பெரும்பகுதி ஹார்முஸ் வழியாகவே வருகிறது.இந்நிலையில், அமெரிக்கா இந்தியாவுக்கு முக்கியமான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய 30 நாட்கள் தற்காலிக விலக்கு அளித்துள்ளது.

அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் இதுகுறித்து கூறுகையில், “ஜனாதிபதி டிரம்பின் எரிசக்தி கொள்கையால் அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. உலக சந்தையில் எண்ணெய் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய, இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷிய எண்ணெயை வாங்குவதற்கு 30 நாட்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இது ரஷிய அரசுக்கு கணிசமான நிதி நன்மை அளிக்காது.

ஏனெனில், ஏற்கனவே கடலில் சிக்கியுள்ள எண்ணெய் பரிவர்த்தனைகளை மட்டுமே இது உள்ளடக்கியுள்ளது. இந்தியா அமெரிக்காவின் முக்கிய பங்காளியாக உள்ளது. இந்தியா அமெரிக்க எண்ணெய் கொள்முதலை அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஈரானின் முயற்சியால் ஏற்படும் எரிசக்தி நெருக்கடியை இந்த நடவடிக்கை தணிக்கும்” என்றார். இந்திய அரசு தினமும் இருமுறை எரிசக்தி நிலவரத்தை ஆய்வு செய்து வருகிறது. எரிபொருள் இருப்பு மற்றும் விநியோகத்தில் தற்போது பற்றாக்குறை இல்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், சூழல் மாறினால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தயாராக உள்ளது.இந்தப் போர் தொடர்ந்தால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம், விநியோக சங்கிலி பாதிப்பு ஆகியவை உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளன. இந்த நெருக்கடி விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
 

இதையும் படிங்க: எண்ணெய் தட்டுப்பாடு வராது! இந்தியா, சீனாவிற்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா அதிரடி முடிவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share