×
 

இந்தியாவில் தஞ்சமடைந்த ஈரானிய கப்பல்! கொச்சி துறைமுகத்தில் 183 வீரர்களுக்கு பாதுகாப்பு!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானின் மற்றொரு போர்க்கப்பலான IRIS Lavan-க்கு இந்தியா அடைக்கலம் அளித்துள்ளது.

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானிய கடற்படையின் மற்றுமொரு கப்பலான 'ஐ.ஆர்.ஐ.எஸ் லவன்' (IRIS Lavan) 183 வீரர்களுடன் கொச்சி துறைமுகத்தில் பாதுகாப்பாகத் தஞ்சமடைந்துள்ளது. இத்தகவலை இந்திய அரசின் உயர்மட்ட ஆதாரங்கள் இன்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.


ஈரானின் 'ஐ.ஆர்.ஐ.எஸ் லவன்' கப்பல், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேசக் கடற்படை அணிவகுப்பு (IFR 2026) மற்றும் 'மிலன்' (MILAN 2026) பயிற்சியில் பங்கேற்றுத் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பிப்ரவரி 28 அன்று இந்தியாவிடம் அவசரமாகத் தஞ்சமடைய அனுமதி கோரியது.

ஈரான் விடுத்த மனிதாபிமானக் கோரிக்கையை ஏற்று, இந்திய அரசு மார்ச் 1 அன்று அந்தக் கப்பல் கொச்சி துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி வழங்கியது.

இதையும் படிங்க: அமெரிக்க தாக்குதலுக்கு அஞ்சி தவித்த ஈரானிய கப்பலுக்கு இலங்கை உதவி!

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் 'ஐ.ஆர்.ஐ.எஸ் தேனா' கப்பலைத் தாக்கி அழித்த அதே நாளான மார்ச் 4 அன்று, 'ஐ.ஆர்.ஐ.எஸ் லவன்' கப்பல் கொச்சி துறைமுகத்தை வந்தடைந்தது. தற்போது அந்தக் கப்பல் இந்தியக் கடற்படையின் நேரடிக் கண்காணிப்பில் பாதுகாப்பாக உள்ளது.

கப்பலில் இருந்த 183 ஈரானிய வீரர்களும் தற்போது கொச்சியில் உள்ள இந்தியக் கடற்படை வசதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது.


தேனா கப்பல் தாக்கப்பட்ட விவகாரத்தில் அமெரிக்காவை கடுமையாகச் சாடியுள்ள ஈரான், லவன் கப்பலுக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியாவின் மனிதாபிமானச செயலுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானியக் கப்பலுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்திருப்பது சர்வதேச அரசியல் அரங்கில் இந்தியாவின் 'கூட்டாட்சித் தத்துவ' நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே தீர்வு...! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share