பதற்றத்தில் ஈரான்-இஸ்ரேல்..!! வீட்டிலேயே இருங்க.. வெளியே வராதீங்க..!! இந்தியர்களுக்கு தூதரகம் வார்னிங்..!!
இஸ்ரேல்-ஈரான் மோதலால் இந்திய தூதரகம் முக்கிய எச்சரிக்கையை இஸ்ரேல், ஈரான் நாட்டில் இருக்கும் இந்தியர்களுக்கு விடுத்துள்ளது.
இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் பெருமளவிலான பதில்தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தெலாவிவில் உள்ள இந்தியத் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் வெளியிட்ட அறிவிப்பில், இஸ்ரேலில் தற்போது நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அனைத்து இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. எப்போதும் உஷாராக இருக்குமாறும், இஸ்ரேல் அரசு மற்றும் ஹோம் ஃப்ரண்ட் கமாண்ட் (Home Front Command) வெளியிடும் பாதுகாப்பு வழிமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இந்தியர்கள் தங்கள் வீடு, பணியிடம் அல்லது தங்கியிருக்கும் இடங்களுக்கு அருகிலுள்ள பாதுகாப்பு இடங்களை (shelters / protected spaces) முன்கூட்டியே நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அத்தகைய பாதுகாப்பு இடங்களுக்கு அருகாமையில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் அறிவிப்பு வரும் வரை தேவையற்ற பயணங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் ஊடகங்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், அவசர எச்சரிக்கை அலர்ட்கள் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து வருமாறும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈரான் மீது தாக்குதல் தொடங்கியாச்சு.. வீடியோ மூலம் வார்னிங் கொடுத்த டிரம்ப்.. ஷாக்கில் உலக நாடுகள்..!!
ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால், இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகத்தை 24 மணி நேர ஹெல்ப்லைன் மூலம் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: +972-54-7520711; மின்னஞ்சல்: cons1.telaviv@mea.gov.in (mailto:cons1.telaviv@mea.gov.in). தூதரகம் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், தேவையான புதுப்பிப்புகளை தொடர்ந்து வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கும் தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்குள்ள இந்தியர்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும், வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற இயக்கங்களைத் தவிர்த்து, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவசர உதவி தேவைப்பட்டால், ஈரானில் உள்ள இந்தியத் தூதரகத்தை பின்வரும் எண்களில் தொடர்பு கொள்ளலாம்: +989128109115, +989128109102, +989128109109, +989932179359. இரு நாடுகளிலும் உள்ள இந்திய சமூகத்தினர் இந்த எச்சரிக்கைகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு, சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தப் பதற்ற நிலை தொடர்பான மேலதிக தகவல்கள் தேவைப்பட்டால், அதிகாரப்பூர்வ ஆதாரங்களை நம்பி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க: முற்றும் மோதல்: இஸ்ரேல் வான்வழி தாக்குதல்.. பற்றி எரியும் ஈரான்..!! நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம்..!!