×
 

சீன செயலியால் காத்திருக்கும் ஆபத்து!! உஷரான இந்தியா! கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோருக்கு திடீர் உத்தரவு

'இ - ரிக்ஷா' எனப்படும், மின்சார ரிக்ஷாக்களை தொலைவிலிருந்து செயலிழக்கச் செய்யும் மூன்று சீன செயலிகளை, 'கூகுள் பிளே ஸ்டோர்' மற்றும் 'ஆப்பிள் ஆப் ஸ்டோர்' ஆகியவற்றில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மின்சார இ-ரிக்ஷாக்களை தொலைவிலிருந்தே செயலிழக்கச் செய்ய பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த மூன்று சீன மொபைல் செயலிகளை, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து அகற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, இ-ரிக்ஷா ஓட்டுநர்களின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பெட்ரோல் மற்றும் டீசல் ஆட்டோக்களின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக லித்தியம் பேட்டரியில் இயங்கும் இ-ரிக்ஷாக்கள் மற்றும் சி.என்.ஜி. எரிவாயுவில் இயங்கும் ஆட்டோக்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இ-ரிக்ஷாக்களை மர்ம நபர்கள் மொபைல் செயலி மூலம் தொலைவிலிருந்தே முடக்குவதாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இதையும் படிங்க: 'ஆப்ரேஷன் சைஹாக் 5.0' 48 மணி நேரத்தில் 916 சைபர் குற்றவாளிகள் கைது! டெல்லி போலீஸ் அதிரடி

குறிப்பாக, தனது இ-ரிக்ஷா திடீரென பூட்டப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கூறி ஓட்டுநர் ஒருவர் கதறி அழுத வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் இ-ரிக்ஷா ஓட்டுநர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதுடன், அரசின் கவனத்தையும் ஈர்த்தது.

இதையடுத்து டெல்லி அரசு உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டது. போக்குவரத்துத் துறை மற்றும் டெல்லி காவல்துறையினர் இணைந்து நடத்திய ஆய்வில், 'Bad BMS', 'E-Boschayan' மற்றும் 'Lasiki' என்ற மூன்று சீன செயலிகள், இ-ரிக்ஷாக்களில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி மேலாண்மை அமைப்புடன் புளூடூத் தொழில்நுட்பம் மூலம் இணைந்து, வாகனத்தை தொலைவிலிருந்து செயலிழக்கச் செய்யும் திறன் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.

இந்த செயலிகள் டெல்லியில் மட்டுமின்றி உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்திலும் தவறாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அவசர நடவடிக்கையில் இறங்கியது. அதன் அடிப்படையில், இந்த மூன்று செயலிகளையும் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை, மின்சார வாகனங்களின் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற தொழில்நுட்ப தவறான பயன்பாடுகளை தடுக்க கூடுதல் பாதுகாப்பு நடைமுறைகளையும் அரசு ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதையும் படிங்க: ஒரே ஓடுபாதையில் நேருக்கு நேர் வந்த இரு விமானங்கள்!! அச்சத்தில் உறைந்த பயணிகள்! திக்! திக்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share