இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சி! அமெரிக்க H-1B விசா பெறுவதில் 70% சரிவு!
அமெரிக்காவில் புதிய H-1B விசாக்கள் பெறுவது கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்து, இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பெரிய பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தகவல் தொழில்நுட்பத் (IT) துறைக்குப் பெரும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, அமெரிக்காவில் புதிய H-1B வேலைவாய்ப்பு விசாக்களைப் பெறுவது கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு கடுமையாகக் குறைந்துள்ளது. புதிய விசா ஒப்புதல்களில் முதல் முறையாக, பெரிய இந்திய ஐடி நிறுவனங்கள், அமேசான், மெட்டா போன்ற அமெரிக்க டெக் நிறுவனங்களுக்குப் பின்னால் தள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தேசியக் கொள்கைக்கான அறக்கட்டளை (National Foundation for American Policy) வெளியிட்ட சமீபத்திய அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்தியாவின் முதல் ஏழு பெரிய ஐடி நிறுவனங்களுக்கு 2025 நிதியாண்டில் கிடைத்த புதிய H-1B வேலைவாய்ப்பு விசாக்களின் மொத்த எண்ணிக்கை வெறும் 4,573 மட்டுமே. இது 2015-ஐ ஒப்பிடும்போது 70 சதவீதம் வீழ்ச்சியாகும். மேலும், முந்தைய 2024 நிதியாண்டை விட இது 37 சதவீதம் குறைவு ஆகும். H-1B விசா வரலாற்றில், புதிய விசா ஒப்புதல்களில் முதல் நான்கு இடங்களை அமேசான், மெட்டா, மைக்ரோசாஃப்ட், கூகுள் ஆகிய அமெரிக்க டெக் ஜாம்பவான்களே பிடித்துள்ளன. புதிய வேலைவாய்ப்புக்கான விசாக்கள் பெற்ற முதல் 25 நிறுவனங்களின் பட்டியலில், மூன்று இந்திய நிறுவனங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. அதில் டி.சி.எஸ் (TCS) மட்டுமே முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்ற ஒரே இந்திய ஐடி நிறுவனம் ஆகும்.
புலனாய்வுத் தரவுகளின்படி, தொடர்ச்சியாகப் பணிபுரியும் ஊழியர்களுக்கான விசா நீட்டிப்புகளில் டி.சி.எஸ் முன்னணியில் இருந்தாலும், அதன் நிராகரிப்பு விகிதம் அதிகரித்துள்ளது. 2024-இல் 4 சதவீதமாக இருந்தது; 2025-இல் 7 சதவீதம் ஆகியுள்ளது. இது மற்ற முக்கிய நிறுவனங்களை விட கணிசமாக அதிகமாகும். புதிய வேலைவாய்ப்புக்கான விசாக்களில், டி.சி.எஸ் 2 சதவீதம் நிராகரிப்பு விகிதம் மட்டுமே பெற்ற நிலையில், HCL America – 6 சதவீதமாகவும், LTIMindtree – 5 சதவீதமாகவும், Capgemini – 4% சதவீதமாகவும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. விசா நடைமுறைகள் கடுமையாகியுள்ளதால், புதிய ஊழியர்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்குப் பதிலாக, ஏற்கெனவே உள்ள ஊழியர்களைச் சட்டரீதியாகத் தக்கவைத்துக் கொள்வதில் ஐடி நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்துகின்றன என்று வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்.. SIR, தேசிய பாதுகாப்பு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் உறுதி!
H-1B திட்டம் தற்போது “புதிய ஊழியர்களை வரவழைக்கும் முறையாக இல்லாமல், கிரீன் கார்டுக்காகக் காத்திருக்கும் ஊழியர்களைத் தக்கவைக்கும் அமைப்பாகவே மாறி வருகிறது” என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சிலர் H-1B ஊழியர்களை "குறைந்த கூலி உழைப்பாளர்கள்" என்று விமர்சித்து வந்தாலும், தரவுகள் அதை மறுக்கின்றன. 2024-இல் H-1B நிபுணர்களின் சராசரி ஆண்டுச் சம்பளம் ₹1 கோடியே 11 லட்சம் ஆகும். மேலும், விசா பெற்றவர்களில் 63 சதவீதம் பேர் முதுநிலை அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி கொண்டவர்கள். இதனால், H-1B விசா திட்டம் இன்னும் அமெரிக்காவுக்கும் உலகளவிலும் அதிகத் திறமை வாய்ந்த நிபுணர்களை ஈர்க்கும் முக்கிய வாயிலாகத் திகழ்கிறது என்பதும் தெளிவாகியுள்ளது.
இதையும் படிங்க: 2 நாள் பயணம்..!! இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்..!! காரணம் இதுதான்..!!