நடுவானில் வீரச் செயல்..!! இந்தியாவின் 'REAL HERO'-வுக்கு 'உயரிய விருது' வழங்கி கௌரவித்த UAE அரசு..!!
அமீரக வரலாற்றில் இவரது பெயர் என்றும் பெருமையுடன் நிலைத்திருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
கடந்த செப்டம்பர் 30ம் தேதி அன்று துபாயில் இருந்து தெல் அவீவுக்குச் சென்ற ஃப்ளைதுபாய் விமானம் FZ1073-இல் நடுவானில் எதிர்பாராத தாக்குதல் நிகழ்ந்தது. விமானிகள் அறையில் கேப்டன் ஸ்மித் மச்சார் மீது அவரது இணை விமானி திடீரென தாக்குதல் நடத்தினார். கடுமையான காயங்களுடன் இரத்தம் வழிந்த நிலையிலும் கேப்டன் தனது சுயநினைவை இழக்காமல், கடைசி சக்தியைக் கொண்டு விமானிகள் அறைக் கதவைத் திறந்தார்.
கதவு திறந்தவுடன் பணியாளர்களும் பயணிகளும் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்தனர். இதனால் விமானம் ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் இருந்து வேகமாக இறங்கிய போதிலும், பேரழிவு தவிர்க்கப்பட்டது. விமானத்தில் இருந்த 170-க்கும் மேற்பட்டோர் அனைவரும் உயிர் பிழைத்தனர். பின்னர் விமானம் சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இந்த அசாத்திய தைரியத்தையும் பொறுப்புணர்வையும் பாராட்டி ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், கேப்டன் ஸ்மித் மச்சார் உள்ளிட்ட விமானப் பணியாளர்களுக்கு ‘முதலாம் வகுப்பு ஆர்டர் ஆஃப் சயீத் II’ என்ற மிக உயரிய சிவிலியன் விருதை வழங்கினார். துபாய் இளவரசரும் பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் இந்த விருதுகளை வழங்கினார்.
இதையும் படிங்க: இஸ்ரேல் சுதந்திர தின விழா: பிரதமர் மோடி, விமானி ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு!
முன்னதாக அக்டோபர் 3 அன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேப்டனை அவர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். “மனித உயிர்கள் மீது கேப்டன் காட்டிய பொறுப்பும் தைரியமும் மிக உயர்ந்தவை. அமீரக வரலாற்றில் இவரது பெயர் என்றும் பெருமையுடன் நிலைத்திருக்கும்” என அவர் குறிப்பிட்டார்.
இந்த வீரச் செயலுக்கு உலகத் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி அவரை உண்மையான ஹீரோ என்று போற்றினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் படுகாயத்துடன் கதவைத் திறந்து விபத்தைத் தடுத்த தைரியத்தைப் பாராட்டினார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாழ்த்து தெரிவித்ததோடு, இஸ்ரேல் அரசு சார்பில் சிவிலியன் வீர விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மித் மச்சார் குணமடைந்த பிறகு அது வழங்கப்படும்.
தனது உயிரையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானியின் இந்தச் செயல் உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளது. கேப்டன் தற்போது யுஏஇ-யில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!