×
 

ஜகார்த்தாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!!

பிரதமர் மோடிக்கு இந்தோனேசியாவின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்று நாடுகள் கொண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவை சென்றடைந்தார். அவருக்கு அந்நாட்டு அரசு மிகுந்த மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு அளித்தது. இதன் ஒரு பகுதியாக, இந்தோனேசியாவின் உயரிய தேசிய விருதுகளில் ஒன்றான "பிந்தாங் அடிபூர்ணா ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் இந்தோனேசியா" விருதை அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்தார்.

பிரதமர் மோடியின் சிறப்பு விமானம் இந்தோனேசிய வான்வெளிக்குள் நுழைந்ததும், அந்நாட்டின் அதிநவீன போர் விமானங்கள் பாதுகாப்பு அணிவகுப்பாக விமான நிலையம் வரை வழியனுப்பின. வெளிநாட்டுத் தலைவர்களின் வருகையின்போது அதிபர் நேரடியாக விமான நிலையத்துக்கு வருவது கட்டாய நடைமுறை அல்ல என்றாலும், இந்தியாவுடனான நட்புறவுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ நேரில் வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். இந்த நிகழ்வு இரு நாடுகளின் நீண்டகால நட்புறவையும் பரஸ்பர நம்பிக்கையையும் எடுத்துக்காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இந்தப் பயணத்தின் போது இரு தலைவர்களும் வர்த்தகம், பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு, முதலீடுகள், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விரிவான ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் தடையற்ற கடல்சார் வர்த்தகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய ஒப்பந்தங்கள் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதையும் படிங்க: எரிசக்தி நெருக்கடியை திறம்பட சமாளித்தது இந்தியா..!! பிரதமர் மோடி பெருமிதம்..!!

மேலும், இந்தோனேசியாவில் வாழும் இந்திய வம்சாவளியினரையும் பிரதமர் மோடி சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளார். அந்நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பை பாராட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு இந்தியக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பங்கேற்றிருந்த நிலையில், அதற்கான பதில் மரியாதையாக பிரதமர் மோடியின் இந்தப் பயணம் அமைந்துள்ளது. இந்தியா–இந்தோனேசியா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக இந்தச் சுற்றுப்பயணம் பார்க்கப்படுகிறது. 

ஜகார்த்தா பயணத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தியாவின் 'Act East' கொள்கையையும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் மூலோபாய பங்களிப்பையும் மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக இந்த மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்: வி.பி. ஜிராம்ஜி திட்டத்தில் 100% நிதி கோரி வலியுறுத்தல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share