×
 

ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடல்..!! ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு..!!

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது என்பதை அமெரிக்கா தரப்பு மறுத்துள்ளது.

பெர்சிய வளைகுடா பகுதியில் ஏற்கெனவே நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக, ஈரான் தனது ராணுவ நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்கா ஈரான் மீது தொடர்ச்சியாக நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான இந்த நீரிணை மூடப்படுவது உலகப் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஈரான் ராணுவ அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையின்படி, வணிகக் கப்பல்கள், எண்ணெய் டாங்கர்கள் உள்ளிட்ட எந்தவிதமான கப்பல்களும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது. மீறி கடக்க முயலும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை மீறி சட்டவிரோதமாக நீரிணையைக் கடக்க முயன்ற இரு வணிகக் கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களின் நாடு, பெயர் மற்றும் அவற்றில் இருந்த மாலுமிகளின் நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இந்த சம்பவம் சர்வதேச கப்பல் போக்குவரத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹார்முஸ் நீரிணையை நெருங்கும் எந்தக் கப்பலும் எதிரி நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கருதி தாக்கப்படும் என்று ஈரான் மேலும் எச்சரித்துள்ளது. உலக எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 20 சதவீதம் இந்த நீரிணை வழியாகவே கடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் போன்ற நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதி இந்த வழியைச் சார்ந்துள்ளதால், விலை உயர்வு மற்றும் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

இதையும் படிங்க: மண் மணத்தை திரையில் விதைத்த பாரதிராஜா..! இயக்குனர் இமயத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்..!!

மறுபுறம், அமெரிக்கா இந்த மூடல் அறிவிப்பை மறுத்துள்ளது. ஹார்முஸ் நீரிணை திறந்தே இருப்பதாகவும், சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு எந்தத் தடையும் இல்லை என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மிரட்டல், ராணுவ நடவடிக்கை அல்லது அச்சுறுத்தல்கள் மூலம் எந்த அமைதி உடன்படிக்கையும் எட்ட முடியாது என்று ஈரானின் ஐ.நா. தூதர் அமீர் சயீத் இரவானி தெரிவித்துள்ளார்.

இந்தப் பதற்றம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கெனவே நிலவும் பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஈரான்-இஸ்ரேல், ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதல் பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை சர்ச்சை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச சமூகம் உடனடியாக தலையிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில், உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வு ஏற்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். கப்பல் நிறுவனங்கள் மாற்று வழித்தடங்களைத் தேடத் தொடங்கியுள்ளன. இந்தப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படாவிட்டால் உலகளாவிய பொருளாதார விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதையும் படிங்க: கூடங்குளம் மக்கள் குற்றவாளிகளா.? நோகடிக்கும் வழக்குகள்... வேல்முருகன் வைத்த முக்கிய கோரிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share