இனி அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் கட்டணம்..!! புதிய மசோதாவுக்கு ஈரான் கிரீன் சிக்னல்..!!
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்களுக்கும் கட்டணம் விதிக்க வழிவகுக்கும் வகையில், மார்ச் 26ல் புதிய சட்ட மசோதாவை ஈரான் அரசு தயாரித்து சமர்பித்திருந்தது.
ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், உலகப் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் வகையில் ஹார்முஸ் நீரிணை பிரச்னை மேலும் சிக்கலாகியுள்ளது. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது வலுவான ராணுவத் தாக்குதலை நடத்தின. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் உயிரிழந்தனர்.
தலைநகர் டெஹ்ரான் உட்பட பல முக்கிய நகரங்களை இலக்காக்கிய இந்தத் தாக்குதலில், ஒரு பெண்கள் பள்ளிக்கு அருகில் ஏற்பட்ட வெடிப்பில் சுமார் 170-க்கும் மேற்பட்ட சிறுமிகள் உட்பட பொதுமக்கள் பலர் உயிரிழந்ததாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தை ஈரான் தனது உச்சக்கட்ட எதிர்ப்புக்கு காரணமாகக் கருதி, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அவற்றின் நட்பு நாடுகளுக்கு எதிராகப் போர் அறிவித்து தாக்குதல்களைத் தொடங்கியது.
இந்தப் போர் நீடித்து வரும் வேளையில், உலகின் முக்கிய எரிபொருள் போக்குவரத்து வழியான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. உலகின் சுமார் 20-25 சதவீத கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு இந்த நீரிணை வழியாகவே விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன.
இதையும் படிங்க: ஹார்முஸ் தடையை தாண்டிய 3வது எண்ணெய் கப்பல்..!! குஜராத் வந்து சேர்ந்த 'ஜக் லட்கி'..!!
குறிப்பாக, ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் கடுமையான எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன. இது அந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை பெரிதும் பாதித்துள்ளது. பல நாடுகள் இந்தப் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தப் பின்னணியில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிப்பதற்கான புதிய சட்ட மசோதாவை ஈரான் அரசு மார்ச் 26-ஆம் தேதி தயாரித்து சமர்ப்பித்தது. இந்த மசோதாவுக்கு இன்று (ஏப்ரல் 1) ஈரான் நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் புதிய திட்டத்தின்படி, நீரிணையை கடக்கும் அனைத்து கப்பல்களும் ஈரானின் தேசிய நாணயமான ரியால் மூலம் கட்டணம் செலுத்த வேண்டும்.
இது ஈரானின் இறையாண்மையையும், நீரிணை மீதான கட்டுப்பாட்டையும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடன் தொடர்புடைய கப்பல்களுக்கு இந்தப் பாதையைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நாடுகளின் கப்பல்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் ஈரான் தனது பொருளாதார நிலையை வலுப்படுத்த முயல்வதாகக் கருதப்படுகிறது.
இந்தப் போர் மற்றும் ஹார்முஸ் நீரிணை சிக்கல் காரணமாக உலகப் பொருளாதாரம் கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வு, பொருளாதார மந்தநிலை அபாயம் உள்ளிட்ட பல்வேறு சவால்கள் உலக நாடுகளை பாதித்து வருகின்றன. போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் தீவிரமடைந்தாலும், இரு தரப்புகளும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், சமாதானம் எப்போது கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இதையும் படிங்க: எங்களுக்கு யாரும் தேவையில்லை! ஹார்முஸ் விவகாரத்தில் நேட்டோ நாடுகளை சாடிய டொனால்ட் டிரம்ப்!