×
 

ஈரானில் அமெரிக்க சி-130 விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது? 5 பேர் பலி என ஈரான் அதிரடி தகவல்!

ஒரு சி-130 (C-130) ராணுவப் போக்குவரத்து விமானம் மற்றும் இரண்டு பிளாக் ஹாக் (Black Hawk) ஹெலிகாப்டர்கள் ஈரானியப் படைகளால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானில் சுட்டுவீழ்த்தப்பட்ட எப்-15இ (F-15E) போர்விமானத்தின் இரண்டாவது விமானியை மீட்க அமெரிக்கா நடத்திய அதிரடி மீட்பு நடவடிக்கையில், அமெரிக்காவின் மேலும் மூன்று விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும், இதில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும் ஈரான் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது. எனினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த மீட்புப் பணி 'மிகவும் துணிச்சலானது' மற்றும் 'வெற்றிகரமானது' என்று வர்ணித்துள்ளார்.

ஈரானின் மத்திய கட்டளை அலுவலகமான 'கதம் அல்-அன்பியா' (Khatam Al-Anbiya) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தெற்கு இஸ்பஹான் பகுதியில் அமெரிக்காவின் ஊடுருவல் விமானங்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஒரு சி-130 (C-130) ராணுவப் போக்குவரத்து விமானம் மற்றும் இரண்டு பிளாக் ஹாக் (Black Hawk) ஹெலிகாப்டர்கள் ஈரானியப் படைகளால் சுட்டுவீழ்த்தப்பட்டு, அவை தற்போது எரிந்து கொண்டிருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் ராணுவ வீரர்களா அல்லது பொதுமக்களா என்பது குறித்து ஈரான் தெளிவுபடுத்தவில்லை. அமெரிக்க விமானங்களுடன் சேர்த்து ஒரு இஸ்ரேலிய ட்ரோனும் (Drone) சுட்டுவீழ்த்தப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.


ஈரானின் புகார்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த மீட்புப் பணியை ஒரு 'அதிசயம்' என்று குறிப்பிட்டுள்ளார்: ஈரானின் கரடுமுரடான மலைப்பகுதிகளில் எதிரிகளிடம் சிக்கியிருந்த அமெரிக்கக் கர்ணல் (Colonel) அந்தஸ்தில் உள்ள விமானி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் ஒருபோதும் தனிமையில் இல்லை; 24 மணிநேரமும் அமெரிக்க ராணுவத்தின் கண்காணிப்பில் இருந்தார் என்று டிரம்ப் பெருமிதத்துடன் தெரிவித்தார். நேற்று ஒரு விமானி மீட்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது வீரரும் மீட்கப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே எதிரி நாட்டு எல்லைக்குள் இருந்து இருவர் தனித்தனியாக மீட்கப்படுவது இதுவே முதல் முறை என அவர் குறிப்பிட்டார். இரண்டாவது வீரரின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்பதற்காகவே முதல் வீரரின் மீட்புச் செய்தியை அமெரிக்கா நேற்று ரகசியமாக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஈரான் போரில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15E விமானம்! மாயமான வீரர்கள் தேடும் பணி தீவிரம்!

கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்காவின் 4.5 தலைமுறை எப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் (F-15E Strike Eagle) போர்விமானத்தை ஈரான் சுட்டுவீழ்த்தியது. இதில் இருந்த இரண்டு வீரர்களில் ஒருவர் சனிக்கிழமை மீட்கப்பட்டார். இரண்டாவது வீரரைத் தேடும் பணியின் போதுதான் ஏ-10 வார்தாக் (A-10 Warthog) விமானமும் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ஈரான் முன்னரே அறிவித்திருந்தது. ஈரான் தனது தரப்பில் புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டாலும், சி-130 மற்றும் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களின் இழப்பு குறித்து அமெரிக்க ராணுவம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதிப்படுத்தவில்லை. மீட்புப் பணி வெற்றிகரமாக முடிந்தாலும், அமெரிக்கா சந்தித்திருக்கும் இந்த 'வான்வழி இழப்புகள்' போரின் போக்கை மேலும் தீவிரப்படுத்தும் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: யாருக்கும் அடிமையாக மாட்டோம்! அமெரிக்கா, சீனாவிற்கு எதிராக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் போர்க்கொடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share