ஈரானுக்கு ரெண்டே வழிதான் இருக்கு!! பேச்சுவார்த்தையா? போரா? முடிவுபண்ணிக்குங்க! ட்ரம்ப் மிரட்டல்
ஈரான் அணு ஆயுதம் வைத்திருந்தால் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா தகர்ந்திருக்கும் – டிரம்ப் எச்சரிக்கை!
ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க முடியாது என்றும், அப்படி இருந்திருந்தால் மத்திய கிழக்கு மட்டுமல்ல, ஐரோப்பாவும் தகர்க்கப்பட்டிருக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
புளோரிடாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், “ஈரான் என்று அழைக்கப்படும் அந்த அழகான நாட்டிற்கு ஒரு சிறிய பயணம் மேற்கொள்ள வேண்டும். அவர்களிடம் அணு ஆயுதங்கள் ஏதும் இல்லை என்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
மேலும், “ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க முடியாது. அப்படி இருந்திருந்தால் மத்திய கிழக்கை மட்டுமல்ல, ஐரோப்பாவையும் தகர்த்திருக்கும். மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் சின்னாபின்னமாகியிருக்கும். அதனால்தான் ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று விளக்கினார்.
இதையும் படிங்க: ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது! கச்சா எண்ணெய்யில் வருமானம் இல்லை!! ட்ரம்ப் சூசகம்!
ஈரானின் ராணுவ வலிமை குறித்தும் டிரம்ப் பேசினார். “ஈரானிடம் கடற்படை இல்லை, விமானப்படை இல்லை. அவர்களின் தலைவர்கள் மிகவும் கொடூரமானவர்கள். 42,000 போராட்டக்காரர்களை அவர்கள் கொன்றுள்ளனர்” என்று குற்றம் சாட்டினார்.
எனினும், ஈரானுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இருப்பதாக டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். “ஈரான் ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக உள்ளது. ஈரானுக்கு எஞ்சியிருப்பது இரண்டு வழிகளே – பேச்சுவார்த்தை நிபந்தனைகளை ஏற்பது அல்லது மோதல் தீவிரமடைவது” என்று எச்சரித்தார்.
அமெரிக்க அதிபரின் இந்தப் பேச்சு, ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்கள் தொடரும் சூழலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஈரான் பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடியில் இருப்பதாகவும், அணு ஆயுதத் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்றும் டிரம்ப் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறார்.
இந்தப் பேச்சு சர்வதேச அளவில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான்-அமெரிக்கா இடையேயான பதற்றம் தொடரும் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறுமா என்பது உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: மேற்காசிய போர் தொடர்ந்தால்!! மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்!! புடின் எச்சரிக்கை!!