முதல்ல போரை நிறுத்துங்க!! ஹார்முஸை திறக்கலாம்!! அப்புறம் அணுசக்தி பற்றி பேசலாம்!! ஈரான் கறார்!!
'முதலில் போரை நிறுத்துங்கள், ஹார்முஸ் ஜலசந்தியை திறப்போம்; பின்னர் அணுசக்தி பற்றி பேசலாம்' என அமெரிக்காவுக்கு ஈரான் கிடுக்கிப்பிடி நிபந்தனைகளை விதித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதிப் பேச்சு மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. ஈரான் தரப்பில் இருந்து அமெரிக்காவுக்கு மூன்று கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகள் பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஈரான் முன்வைத்துள்ள முக்கிய நிபந்தனைகள் வருமாறு:
முதலில், ஈரான் மற்றும் லெபனான் மீது மீண்டும் எந்தத் தாக்குதலும் நடத்தப்படாது என அமெரிக்கா உத்தரவாதம் அளிக்க வேண்டும். இந்த நிபந்தனைக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டால் மட்டுமே, உலக எரிசக்தி போக்குவரத்துக்கு மிக முக்கியமான ஹார்மூஸ் ஜலசந்தியை திறப்பது குறித்து பேச முடியும்.
இதையும் படிங்க: ஈரான் சென்ற பாக்., அமைச்சர்! 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தூது!! மேற்காசிய போரை முடித்துவைக்க திட்டம்?!
மேலும், ஹார்மூஸ் ஜலசந்தியை முற்றுகையிடும் அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளையும் அமெரிக்கா நிறைவேற்றினால் மட்டுமே, அணுசக்தி மற்றும் யுரேனியம் செறிவூட்டல் பிரச்சினை குறித்து பேச்சு நடத்தலாம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
தற்போது இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சு நடத்த பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது. ஆனால், இரு தரப்பும் மாறி மாறி நிபந்தனைகள் விதிப்பதால் பேச்சு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ரெஸாயி, பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்குக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “பாகிஸ்தான் நல்ல நண்பன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அமைதிப் பேச்சுக்கு மத்தியஸ்தராக செயல்படும் தகுதி அதற்கு இல்லை. பாகிஸ்தான் பெரும்பாலும் அமெரிக்காவின் நலன்களையே கருத்தில் கொள்கிறது” என்று அவர் தெரிவித்தார்.
ஹார்மூஸ் ஜலசந்தி தற்போது இரு தரப்பு முற்றுகையிலும் உள்ளதால், உலக அளவில் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஈரான் விதித்துள்ள கடுமையான நிபந்தனைகள், அமைதிப் பேச்சுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளன.
ஈரான், அமெரிக்கா மீது அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க முயற்சிப்பதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் தரப்போ, ஈரான் தலைமையில் உள்ள அதிகாரப் போட்டியைச் சுட்டிக்காட்டி, ஈரான் தான் முதலில் இறங்கி வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், உலக நாடுகள் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. ஹார்மூஸ் ஜலசந்தி திறக்கப்படாவிட்டால் உலகப் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க: ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை!! தூதரக அதிகாரிகள் தகவல்!!