அமெரிக்க தளங்களை சுக்கு நூறாக சிதறடித்த ஈரான்!! தற்காலிக இடங்களில் தஞ்சம் அடையும் ராணுவ வீரர்கள்!
ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால், மேற்காசியாவில் உள்ள பல அமெரிக்க ராணுவ தளங்கள் பலத்த சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்காசியப் போர் 27-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் அமெரிக்காவின் முக்கிய ராணுவ தளங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. பல தளங்கள் முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், அமெரிக்க படைகள் தற்காலிக இடங்களுக்கு இடம்பெயரும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கியதிலிருந்து, ஈரான் தொடர் பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக, மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை 13 அமெரிக்க ராணுவ தளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குவைத்தில் உள்ள போர்ட் ஷுவைபா, அலி அல் சலேம் விமானப்படை தளம் மற்றும் கேம்ப் புஹ்ரிங் உள்ளிட்ட முக்கிய தளங்கள் ஈரானிய தாக்குதல்களால் மிக மோசமான சேதத்தை சந்தித்துள்ளன. இந்த தளங்களில் உள்ள உள்கட்டமைப்புகள், ரேடார் அமைப்புகள், தங்கும் இடங்கள் உள்ளிட்டவை பெரும் அளவில் அழிந்துள்ளன.
இதையும் படிங்க: வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்! ஈரானுக்கு வலுக்கும் கண்டனம்! தீர்மானம் நிறைவேற்ற ஐ.நா ஒப்புதல்!
விமானப்படை விமானங்கள் வழக்கம் போல் செயல்பட்டாலும், தரைப்படை வீரர்கள் பாதுகாப்பு கருதி ஹோட்டல்கள், தற்காலிக முகாம்கள் மற்றும் பிற இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சில அமெரிக்க படைப்பிரிவுகள் ஐரோப்பிய நாடுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ராணுவ அதிகாரிகளும் வீரர்களும், குவைத்தில் உள்ள தளங்கள் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஈரான் தனது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் திறனை வெளிப்படுத்தியுள்ள இந்த சம்பவம், மேற்காசியாவில் அமெரிக்காவின் நீண்டகால ராணுவ இருப்புக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. பல தளங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதால், அமெரிக்காவின் ராணுவ செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேற்காசியப் போர் தொடங்கியதிலிருந்து இரு தரப்பிலும் தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போர் உலக அளவில் எரிபொருள் விலை உயர்வு, கப்பல் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சூழலில் அமெரிக்க படைகள் தங்களது தளங்களை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ஈரானின் தொடர் தாக்குதல்கள் அமெரிக்காவின் ராணுவ உத்திகளை மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளன.
இதையும் படிங்க: ஈரான் செய்யுறது ரொம்ப பெரிய துரோகம்! இப்பிடி பண்ணுவாங்கனு நினைக்கல! கத்தார் பிரதமர் காட்டம்!!