×
 

ஈரானின் இடைக்கால உச்ச தலைவர் நியமனம்! கமேனி மறைவுக்கு பிறகு அலிரேசா அராஃபி தலைமையில் 3 பேர் குழு!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து, ஈரானின் இடைக்கால உச்சத் தலைவராக அயதுல்லா அலிரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல் - அமெரிக்கக் கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டானச் சூழலில் நாட்டை வழிநடத்த, மூத்த மதகுரு அயதுல்லா அலிரேசா அராஃபி ஈரானின் இடைக்கால உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3 பேர் கொண்ட கவுன்சில்: ஈரானிய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 111-ன் கீழ், புதிய உச்சத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை நாட்டை வழிநடத்த மூன்று பேர் கொண்ட தற்காலிகத் தலைமை கவுன்சில்  அமைக்கப்பட்டுள்ளது. இதில் இடைக்கால உச்சத் தலைவராக அலிரேசா அராஃபி, ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மற்றும் நீதித்துறைத் தலைவர் குலாம் உசேன் மொஹ்சேனி எஜேயி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

67 வயதான அலிரேசா அராஃபி, ஈரானின் சக்திவாய்ந்த பாதுகாவலர் கவுன்சில் மற்றும் நிபுணர்கள் குழுவின் (Assembly of Experts) உறுப்பினராக இருப்பவர். கமேனிக்கு மிகவும் நெருக்கமானவராகவும், ஈரானின் மதக் கல்வி நிறுவனங்களின் தலைவராகவும் செயல்பட்டு வருபவர்.

இதையும் படிங்க: ஈரான் ராணுவ தளபதிகள் பலி! பாதுகாப்பு அமைச்சர் அஜிஸ் நசீர்சாதே கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஈரான்!

சனிக்கிழமை (பிப் 28) இரவு தெஹ்ரானில் உள்ள கமேனியின் இல்லத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், கமேனியுடன் அவரது மகள், மருமகன் மற்றும் பேரன் ஆகியோரும் உயிரிழந்ததாக IRIB மற்றும் Fars செய்தி நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. உச்சத் தலைவரின் மறைவையொட்டி ஈரானில் 40 நாட்கள் தேசியத் துக்கம் மற்றும் 7 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கமேனியின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை நாடு முழுவதும் பாதுகாப்புப் படைகள் 'ரெட் அலர்ட்' நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஈரானின் அடுத்த நிரந்தர உச்சத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை 88 பேர் கொண்ட 'நிபுணர்கள் குழு'  விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1989-க்குப் பிறகு ஈரானில் நடைபெறும் இந்த வரலாற்று அதிகார மாற்றம், மத்தியக் கிழக்கு அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: துபாயில் சிக்கினாரா அஜித்? ரசிகர்கள் கவலைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏகே ரேசிங் டீம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share