×
 

ரத்த காடாக மாறும் ஈரான்! 2 நாளில் 2,000 பேர் பலி; முடங்கிய இணையத்தால் உலகிற்கு தெரியாத கொடூரம்!

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக வெடித்துள்ள மக்கள் போராட்டத்தில், கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாகப் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம், தற்போது ஈரானின் 31 மாகாணங்களுக்கும் பரவி ஒரு மாபெரும் ‘மக்கள் புரட்சியாக’ உருவெடுத்துள்ளது. போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் பாதுகாப்புப் படையினர் நேரடித் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதால், உயிரிழப்புகள் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருகிறது. சில மனித உரிமை அமைப்புகள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் உயிரிழப்பு எண்ணிக்கை 12,000-ஐத் தாண்டியிருக்கலாம் எனத் தெரிவித்தாலும், ஈரான் அரசு சுமார் 2,000 பேர் பலியானதை உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானில் கரன்சி மதிப்புக் கடுமையாகச் சரிந்து, உணவுப் பொருட்களின் விலை 72 சதவீதம் வரை உயர்ந்துள்ளதே இந்தப் போராட்டத்திற்கு முக்கியக் காரணம். பசியால் புரட்சி செய்கிறோம் என்ற முழக்கத்துடன் வீதிக்கு வந்த மக்கள் மீது, ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பாதுகாப்புப் படையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலே இந்த மாபெரும் உயிரிழப்புகளுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. தலைநகர் தெஹ்ரான், ராஷ்ட் மற்றும் ஷிராஸ் ஆகிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் குண்டடிபட்ட உடல்களால் நிரம்பி வழிவதாகச் சம்பவ இடத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்முறைச் சம்பவங்கள் வெளி உலகுக்குத் தெரியாமல் இருக்க கடந்த 8-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இணையச் சேவை மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதுவரை 10,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என ஈரானிய சட்டத்துறை எச்சரித்துள்ளது. இந்தச் சூழலால் துருக்கி மற்றும் கத்தார் போன்ற நாடுகள் ஈரானுக்கான விமானச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமைதியாகப் போராடும் மக்கள் மீதான கொலையை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். ஆனால், வெளிநாட்டுச் சக்திகள் போராட்டத்தைத் தூண்டிவிடுகின்றன என்று ஈரான் அரசுத் தரப்பு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஈரானின் நவீன வரலாற்றிலேயே இது மிகப்பெரிய 'மனிதப் படுகொலை' என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: ஈரானில் தீவிரமடையும் போராட்டங்கள்..!! ஸ்டார்லிங்க் இணைய சேவை முடக்கம்..!! அரசு அதிரடி..!!

இதையும் படிங்க: ஈரானில் அரசுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம்..!! இணைய சேவை முடக்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share