லெபனானை தாக்கிய இஸ்ரேல்!! நீளும் போர் பதற்றம்! ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது ஈரான்!!
போர் நிறுத்தம் அறிவித்த சில மணி நேரத்திலேயே இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் – ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிய ஈரான்!
மேற்காசியாவில் போர் நிறுத்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்குள் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல், லெபனான் மீது பெரும் வான்வழித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியுள்ளது. இதனால் உலக கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்தது. இதையடுத்து ஈரான் 10 நிபந்தனைகளை முன்வைத்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு இரண்டு வார போர் நிறுத்தத்தை அறிவித்தார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இதற்கு ஆதரவு தெரிவித்தாலும், “லெபனான் இதில் சேர்க்கப்படவில்லை. ஹெஸ்பொல்லா மீதான போர் தொடரும்” என்று தெளிவுபடுத்தினார்.
போர் நிறுத்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே இஸ்ரேல் லெபனான் மீது பெரும் தாக்குதலைத் தொடங்கியது. வெறும் 10 நிமிடங்களில் 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசப்பட்டன. பெய்ரூட் உட்பட தெற்கு லெபனான் மற்றும் பெக்கா பள்ளத்தாக்கு பகுதிகளில் வீடுகள், வணிக வளாகங்கள் தாக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 254 பேர் உயிரிழந்தனர். 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையும் படிங்க: கவலை வேண்டாம்! பாதுகாப்பான கைகளில் இந்திய நண்பர்கள்!! ஈரான் தூதரகம் தந்த வாக்குறுதி!
ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்தது. உடனடியாக ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது. ஈரான் 17 ஏவுகணைகள் மற்றும் 35 ட்ரோன்களை ஏவியுள்ளது. ஹெஸ்பொல்லாவும் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
ஏற்கனவே 40 நாட்களுக்கும் மேலாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியிருந்த நிலையில், இப்போது மீண்டும் மூடியுள்ளது. இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய் கப்பல்கள் போக்குவரத்து முடங்கியுள்ளது. பல நாடுகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடும் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது.
ஜலசந்தியில் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டிருப்பதாக ஈரான் வெளியிட்ட வரைபடத்தில், ஆபத்து மண்டலம் குறிக்கப்பட்டுள்ளது. கப்பல்கள் இனி லாரக் தீவுக்கு அருகிலுள்ள வடக்குப் பாதையில் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் மேற்காசியா மீண்டும் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளது. உலகப் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் தொடர்ந்தால், எண்ணெய் விலை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி மட்டும் தடுக்காம இருந்திருந்தா?! இன்னைக்கு நிலைமையே வேற!! மத்திய அமைச்சகம் தகவல்!!