×
 

அமெரிக்கா - ஈரான் போரால் கடுமையான பொருளாதார பின்னடைவு!! புலம்பித் தள்ளும் பாக்., பிரதமர்!!

இந்தியாவுக்கு பாதிப்பில்லை, பாகிஸ்தான் பொருளாதாரம் தடுமாற்றம் – அமெரிக்கா-ஈரான் போர் குறித்து ஷெபாஸ் ஷெரீப் புலம்பல்!

அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்று வரும் போர், பாகிஸ்தான் பொருளாதாரத்துக்கு கடுமையான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசிய ஷெரீப், “கடந்த இரண்டு ஆண்டுகளில் பாகிஸ்தான் பொருளாதாரம் கணிசமான முன்னேற்றம் அடைந்திருந்தது. ஆனால், பிப்ரவரி மாதம் தொடங்கிய ஈரான் போர் காரணமாக அந்த உழைப்பு அனைத்தும் வீணாகிவிட்டது” என்று ஆதங்கத்துடன் கூறினார்.

போர் தொடங்கியதில் இருந்து உலக சந்தையில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். போருக்கு முன்பு பாகிஸ்தானின் வாராந்திர எண்ணெய் இறக்குமதி செலவு 2,850 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது அது 7,600 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு பெரும் நிம்மதி! ரூ.28,000 கோடி கடனுக்கு ஒப்புதல்! சவுதி அரேபியா முடித்து வைத்த டீல்!

“இந்தப் போர் எங்களுக்கோ அல்லது எனக்கோ எந்தப் பங்கும் இல்லை. ஆனால், அதன் விளைவுகளை நாங்கள் தான் சந்திக்க வேண்டியிருக்கிறது” என்று ஷெரீப் கூறினார். மேலும், போர் பதற்றத்தை தணிக்கவும், மேற்காசியாவில் அமைதியை மீட்டெடுக்கவும் பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் பெட்ரோலிய அமைச்சர் அலி பர்வைஸ் மாலிக் இதே கூட்டத்தில் பேசுகையில், “இந்தியா இந்தப் போரால் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஏனென்றால், இந்தியா தன் எண்ணெய் தேவையை ஈரான் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை மட்டும் நம்பியிருக்கவில்லை. ரஷ்யா, ஆப்ரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. மேலும், இந்தியாவிடம் வலுவான அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும் போதுமான எண்ணெய் இருப்பு உள்ளது” என்று விளக்கினார்.

பாகிஸ்தானில் அதிக கடன், பெரிய எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் இல்லாதது, எண்ணெய் இறக்குமதிக்கான அதிக செலவு போன்ற காரணங்களால் பாதிப்பு அதிகமாக இருப்பதாக அமைச்சர் கூறினார்.

ஷெபாஸ் ஷெரீப், ஈரான்-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் மற்றும் துணைப் பிரதமர் இஷாக் தர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாம் கட்ட பேச்சுக்கான முயற்சிகள் தொடர்வதாகவும் அவர் நம்பிக்கை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமா? 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அஸ்திவாரம் போடும் பாக்.,!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share