×
 

அடங்காத இஸ்ரேல்.. ஆத்திரம் தீர தீர தாக்குதல்..!! லெபனானில் பலி எண்ணிக்கை 570 ஆக உயர்வு..!!

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் பலியானவர்கள் எண்ணிக்கை 570-ஆக உயர்ந்து உள்ளதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர் முனையில், ஈரானுக்கு ஆதரவாக இயங்கும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளான தஹியே (Dahiyeh) உள்ளிட்ட இடங்களில் இஸ்ரேலின் போர் விமானங்கள் தீவிர வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. மேலும், மத்திய பெய்ரூத்தில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடம் மீது குண்டு வீச்சு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லெபனான் சுகாதார அமைச்சகம் மற்றும் அதிகாரிகளின் தகவலின்படி, இஸ்ரேலின் இத்தாக்குதல்களால் நாடு முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 570-ஐ எட்டியுள்ளது. இதில் பல சிவிலியன்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் அடங்குவர் என்று கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை விரைவாக உயர்ந்து வருவதால், லெபனானில் மனிதாபிமான நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.

பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, பெய்ரூட்டின் மையப் பகுதியில் உள்ள ரமாடா ஓட்டல் (Ramada Hotel) கட்டிடத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 4 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் ஈரான் தூதரக அதிகாரிகள் அல்லது ஈரானிய இராணுவ அதிகாரிகள் என்று ஈரான் அரசு ஊடகங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் ஈரான் பிரதிநிதி உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: உயிரை காக்க உடனே வெளியேறுங்கள்! லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை!

இஸ்ரேல் தரப்போ இத்தாக்குதலில் ஈரானின் ரெவல்யூஷனரி கார்ட்ஸ் (IRGC) கமாண்டர்களை இலக்காகக் கொண்டதாகக் கூறியுள்ளது. இச்சம்பவம் ஈரான்-இஸ்ரேல் மோதலை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இதற்கு பதிலடியாக, ஹிஸ்புல்லா இயக்கத்தினர் லெபனான்-இஸ்ரேல் எல்லைக்கு அருகிலுள்ள பல இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது ராக்கெட் மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியதாக அறிவித்துள்ளனர். வடக்கு இஸ்ரேலில் உள்ள ராடார் நிலையங்கள், ராணுவ தளங்கள் உள்ளிட்ட இலக்குகளை குறிவைத்து இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் உள்ளன.

ஹிஸ்புல்லாவின் இப்பதிலடி தாக்குதல்கள் இஸ்ரேலின் வடக்குப் பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த மோதல் ஈரான் ஆதரவு குழுக்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதிலடி சங்கிலியாக மாறியுள்ளது. லெபனான் மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். சர்வதேச சமூகம் இப்போரை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. 

இதையும் படிங்க: திக்.. திக்...!! - மெல்ல, மெல்ல ஸ்தம்பிக்கும் தமிழகம்... நாளை முதல் இவையெல்லாம் இயங்க வாய்ப்பே கிடையாது...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share