×
 

அமைதி பேச்சுவார்த்தை! ஈரான் மீதான போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்தார் அதிபர் டிரம்ப்!

ஈரான் உடனான போரில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை காலவரையின்றி நீட்டிக்கிறோம், அமைதிப் பேச்சுவார்த்தைக்காக இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தை காலவரையின்றி (Indefinite Extension) நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று அறிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசு விடுத்த மனிதாபிமான வேண்டுகோளை ஏற்று, இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு கூடுதல் அவகாசம் வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் (ஏப்ரல் 8) அறிவிக்கப்பட்ட இரண்டு வார காலப் போர்நிறுத்தம் இன்றுடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி முனீர் ஆகியோர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, டிரம்ப் இந்த நீட்டிப்பை அறிவித்துள்ளார். அமைதிப் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்திருப்பதை உறுதி செய்ய பாகிஸ்தான் தொடர்ந்து மத்தியஸ்தம் செய்து வருகிறது.

தன்னுடைய 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளதாவது ஈரான் மீதான தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அமெரிக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். ஈரானியத் தலைவர்கள் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் நியாயமான தீர்வை (Unified Proposal) முன்வைக்க வேண்டும். பேச்சுவார்த்தைகள் ஒரு முடிவுக்கு வரும் வரை இந்த அவகாசம் நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணையில் பதற்றம்! இந்தியா வந்துகொண்டிருந்த கப்பல் உள்பட 2 கப்பல்களை  சிறைபிடித்தது ஈரான் !

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை தற்போது சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஈரானியத் தூதுக்குழு இன்னும் இஸ்லாமாபாத்திற்கு வரவில்லை என்றும், பேச்சுவார்த்தை குறித்துத் தெளிவற்ற நிலை நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் செல்லத் தயாராக இருந்த நிலையில், ஈரானின் பதிலுக்காகக் காத்திருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

டிரம்பின் இந்தத் திடீர் போர்நிறுத்த நீட்டிப்பு அறிவிப்பால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டாலும், ஹார்முஸ் நீரிணையில் நிலவும் போக்குவரத்துத் தடைகள் காரணமாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 99 டாலர் வரை உயர்ந்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இந்தத் தற்காலிக அமைதி, ஒரு நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தமாக மாறுமா என்பது அடுத்த 72 மணி நேரத்தில் தெரியவரும் என அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இதையும் படிங்க: 8 பெண்களை விடுதலை செய்யுங்கள்! ஈரானுக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share